/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டேங்கர் லாரியில் சிக்கி விதிமீறிய மாணவர் பலி
/
டேங்கர் லாரியில் சிக்கி விதிமீறிய மாணவர் பலி
ADDED : ஜன 18, 2024 09:34 PM
அம்பத்துார்:இருசக்கர வாகனத்தில் விதிமீறி பயணித்த பள்ளி மாணவர், டேங்கர் லாரியில் சிக்கி பலியானார்.
சென்னை, அம்பத்துார் அடுத்த ஐ.சி.எப்., காலனி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஜீவா, 17, அயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று காலை 8:00 மணியளவில், தன் உறவினரின், 'யமஹா ஆர் 15' ரக இருசக்கர வாகனத்தில், அம்பத்துார் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலையில் இருந்து, புழல் - -தாம்பரம் புறவழிச்சாலை வழியாக, வீட்டிற்குச் சென்றார். அப்போது, அரை அடி உயரம் கொண்ட சாலை தடுப்பின் மீது வேகமாக ஏறி, சாலையின் மறுபக்கத்திற்குச் செல்ல முயன்றார்.
ஆனால், இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில், அவர் சாலையில் விழுந்தார். அப்போது, அந்த இடத்தை கடந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர், தப்பிச் சென்றார். விபத்தின் போது, ஜீவா தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

