/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
24 முதல் ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வருமா? முன்பதிவு பயணியர் குழப்பம்
/
24 முதல் ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வருமா? முன்பதிவு பயணியர் குழப்பம்
24 முதல் ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வருமா? முன்பதிவு பயணியர் குழப்பம்
24 முதல் ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வருமா? முன்பதிவு பயணியர் குழப்பம்
ADDED : ஜன 23, 2024 04:48 AM
சென்னை,: சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவற்றில் பயணம் செய்து வருகின்றனர்.
'தென் தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள், வரும் 24ம் தேதி முதல், புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும். பயணியருடன் சென்னை நகருக்குள் வர அனுமதியில்லை.
இந்த அறிவுறுத்தல்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், 'கிளாம்பாக்கத்தில் நிலையத்தில் போதிய வசதி இல்லை. அங்கு அடிப்படை மற்றும் இணைப்பு வசதி ஏற்படுத்தி தரும் வரையில் சென்னை மாநகருக்குள் வழக்கம் போல இயக்குவோம்' என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதனால், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணியர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
வரும் 25ம் தேதி வியாழன் அன்று தை பூச திருவிழா. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறையும் வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்துார் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், வரும் 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மாறி, மாறி கூறுவது பயணியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில், ஆம்னி பேருந்துகளுக்கு போதிய வசதிகள் செய்யாமல், வரும் 24ம் தேதி முதல் அங்கிருந்து இயக்க சொல்வது, பயணியருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் 5 ஏக்கரில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தும் வசதி பணி முடியும் வரை காலஅவகாசம் அளிக்க வேண்டும். இது குறித்து, பேச தலைமை செயலர் நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

