ADDED : ஜன 19, 2024 11:53 AM
பெண் மீது தாக்குதல்
இருவர் மீது வழக்கு
குளித்தலை அடுத்த, கீரனுார் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினகிரி, 70, விவசாயி. இவரது மருமகள் அஞ்சலை நேற்று முன்தினம் மதியம், 3:30 மணியளவில் தோட்டத்தில் உள்ள வயலுக்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த முனியப்பன், அவரது மகன் சுரேஷ் ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி, அஞ்சலையை தள்ளி விட்டனர்.
இதில் காயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தை, மகன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
தாராபுரத்தனுாரில் கொசு
ஒழிப்பு பணிகள் தீவிரம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தாராபுரத்தனுாரில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், குடியிருப்பு வீடுகளில் வசிக்கும் மக்களிடம் சுற்றுபுறத்துாய்மை குறித்தும், கழிவு நீர் தேங்காமல் இருக்க தேவையான ஆலோசனை மற்றும் நல்ல குடிநீர் மூடி வைத்தல், பழைய பொருட்களான டயர்.
பிளாஸ்டிக் கழிவு, தேங்காய் மட்டை கழிவு ஆகிய பொருட்கள் அகற்றுதல். கழிவு நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துாய்மை பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பார்வையிட்டார்.
நாளை ரேஷன்
குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டுதார்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய கார்டு கோருதல் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் கூட்டம் நாளை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடக்கிறது. பொதுமக்கள், மேற்படி குறைதீர் கூட்டத்தில், பொது வினியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
லாலாப்பேட்டை மண்டியில்
வாழைத்தார்கள் விற்பனை
லாலாப்பேட்டை, வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதால், குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். பூவன் தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய் என விற்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
தொழிலாளியை
அரிவாளால் வெட்டிய சகோதரர்கள் கைது
குளித்தலை அடுத்த, பாப்பாக்காபட்டி பஞ்., குப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 27. இவர் விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் இரும்பூதிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, குப்பனம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் சதீஷ், சூர்யா, இவரது நண்பர் ராஜேஷ் ஆகிய மூவரும் வழிமறித்து, பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு, சதீஷ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் முகத்தில் வெட்டி ரத்தக்காயம் ஏற்படுத்தினார்.
மேலும், சூரியா கையாலும் அடித்தும், ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, சகோதரர்கள் சதீஷ், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
ஜன.,21ல்
மாநில அளவிலான
வினாடி வினா போட்டி
'வரும், 21ல் வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பற்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி வரும், 21 ல் (ஞாயிற்றுக்கிழமை) காலை, 11:00 முதல், 11:15 வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணைய தளம் வாயிலாக பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில், இன்றுக்குள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் மொபைல் எண், இ.மெயில் ஆகியவற்றை கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பசுபதிபாளையம் சிறிய பாலத்துக்கு
இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தல்
கரூர் அருகே பசுபதிபாளையம் ரயில்வே குகை வழிப்பாதை அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் மீது சிறுபாலம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பாலம் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டு திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தில் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. அந்த சாலையில், வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதனால், பசுபதிபாளையம், தொழிற் பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
சின்னதாராபுரம் அருகே மது விற்ற பெண் கைது
சின்ன தாராபுரம் அருகே மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
சின்னதாராபுரம் அருகே, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நஞ்சைக்காளகுறிச்சி பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி மனைவி கருப்பாத்தாள், 42 என்பவர் தன் வீட்டின் அருகே, மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த, ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கல்லுாரி ஊழியர் வீட்டில் 14 பவுன் திருட்டு
ஈரோட்டில் கல்லுாரி ஊழியரின் வீட்டில், 14 பவுன் நகை திருட்டு போனது.
ஈரோடு, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 45, நந்தா கல்லுாரி ஊழியர். திருமணமாகி, ௧௨ வயதில் மகன் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றவர், நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.
வீட்டு முதல் மாடியில் உள்ள முன்பக்க கதவு, படுக்கையறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் கலைந்து கிடந்தன. அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சோதனையில், தங்கக்காசு, நகை என, 14 பவுன் திருட்டு போனது உறுதியானது.
வீட்டில் 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளார். ஆனால், காட்சிகளை பதிவு செய்யும் 'டி.வி.ஆர்.,' பாக்சையும் களவாணிகள் திருடி சென்று விட்டனர். இதனால் பிற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், கைவரிசை காட்டிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
சேவல் சண்டை நடத்திய
ஐந்து பேர் அதிரடி கைது
க.பரமத்தி அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, பெருமாபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்துவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் பெருமாள் பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆலம்பாளையம் சாலையில் உள்ள கிரஷர் பின்புறத்தில் சேவல் சண்டை நடந்து கொண்டிருந்தது. இதில் ஈடுபட்ட க.பரமத்தி முன்னுாரை சேர்ந்த சண்முகம், அருகில் உள்ள சாலை தோட்டத்தை சேர்ந்த சிவகுமார், அத்திப்பாளையம் ராஜன், திருப்பூர் மாவட்டம் முத்துார் மகேந்திரன், குப்பம் பழனிசாமி ஆகிய ஐந்து பேரையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர். மேலும், சண்டைக்கு பயன்படுத்திய மூன்று சேவல்களை பறிமுதல் செய்தனர்.
ரூ.3.23 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுாரில், 3.23 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 7,304 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். மொத்தம், ஐந்து லட்சத்து 67 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 4,255 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் முதல் தரமான தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ, 89.19 ரூபாய், குறைந்தபட்சமாக, 73.29 ரூபாய், சராசரியாக, 83.33 ரூபாய்-க்கு ஏலம் போனது. இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ, 70, குறைந்தபட்சமாக, 54.19, சராசரியாக, 66.39- ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், மூன்று லட்சத்து, 23 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி
பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர அழைப்பு
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம் சாலை, அவ்வை வீதியை சேர்ந்த தம்பதியர் செல்வராஜ், 63, மனைவி தமிழரசி, 56; இருவரும் ஏலச்சீட்டு நடத்தினர். கடந்த, 2019 ஜன., முதல் 2021 டிசம்பர் வரை, நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தப்பினர்.
இதனால் பாதிக்கப்பட்ட, 30 பேர் ஈரோடு பொருளதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். இதில் அவர்களிடம், 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது உறுதி செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே இவர்களால் பாதிக்கப்பட்டு, புகார் தராமல் இருந்தால், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நேரடியாக புகார் தரலாம். இத்தகவலை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
வல்லம் கிராமத்தில்
நெல் அறுவடை பணி
வல்லம் கிராமத்தில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம், பிள்ளபாளையம், லாலாப்பேட்டை பகுதிகளில், பரவலாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இதில் ஆந்திரா பொன்னி நடவு செய்யப்பட்டு வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்பொது நெல் வயல்களில் நெற்கதிர்கள் விளைந்துள்ளது. விளைச்சல் அடைந்த நெற் கதிர்களை அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
மேலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களில், கதிர் அடிக்கும் டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்தாண்டு பாதிப்பு இன்றி நெல் மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மழை, பனி காரணமாக
முருங்கை பூக்கள் உதிர்வு
பனி, மழை காரணமாக முருங்கை பூக்கள் உதிர்வு ஏற்படுவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அரவக்குறிச்சி, ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலுார், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய் தமிழகத்தின் பல இடங்களுக்கும், கர்நாடகா, கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அரவக்குறிச்சி, மலைக்கோவிலுார், ஈசநத்தம், இந்திரா நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களில் இருந்து, முருங்கைக்காய்களை மொத்த வியாபாரிகள் வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் பெய்த தொடர் மழை, கடும் பனி காரணமாக டிசம்பர் மாதத்தில் முருங்கை பூக்கள் உதிரத் துவங்கியது. இந்தாண்டு மார்ச் வரை முருங்கை சீசன் உள்ளது. ஆனால் மரங்களில் உள்ள முருங்கை பூக்கள் மழை, பனி காரணமாக உதிரத் துவங்கி உள்ளது. காய்த்திருந்த முருங்கை காய்களும் ஈரப்பதத்தால் பழுத்து வெம்பி உள்ளது. இதனால் முருங்கைக்காயை பறித்து விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
காய்களை பறிக்கும் கூலி கூட கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கு காய்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால், முருங்கை பயிரிட்டுள்ளவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

