ADDED : ஜன 21, 2024 12:40 PM
சந்தையூர் வாரச் சந்தையில்
ஆடு, கோழிகள் விற்பனை
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடுகிறது. நேற்றைய சந்தையில் ஆடு, கோழி, காய்கறிகள், விற்பனை நடந்தது. கடந்த வாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை அதிகளவில் இருந்தது. நேற்று ஆடு, கோழிகள், விற்பனை சற்று குறைவாகவே காணப்பட்டது. 8 கிலோ எடையுள்ள ஆடு, 6,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் ஆடு, கோழிகளை அதிகளவில் வாங்கி சென்றனர்.
குழந்தைப்பட்டி சிவாயம்
சாலையில் துாய்மை பணி
குழந்தைப்பட்டி சிவாயம் சாலையில், துாய்மை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி, குழந்தைப்பட்டி, சிவாயம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலையின், இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சாலையோரம் வளர்ந்த செடிகளை அகற்றும் பணி நடந்தது.
சிந்தலவாடி மாரியம்மன்
கோவிலில் நாடக மேடை
கட்ட பூமி பூஜை
சிந்தலவாடி மாரியம்மன் கோவில் அருகில், புதிய நாடக மேடை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
சிந்தலவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், புதிய நாடக மேடை கேட்டு பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, கரூர் மாவட்ட பஞ்சாயத்து மேம்பாட்டு நிதி மூலம், புதிய நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜை கோவில் அருகில் நடந்தது. கரூர் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் கண்ணதாசன் தலைமை வகித்தார். சிந்தலவாடி பஞ்சாயத்து தலைவர் வெண்ணிலா மற்றும் கோவில் நிர்வாகிகள், பகுதி மக்கள் கலந்து கொண்டனர். மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தன.
கோவில் பகுதியில்
வாகனங்கள் நிறுத்த
தடை செய்ய வேண்டும்
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக இருந்து வருகிறது. குளித்தலை காவிரி ஆற்றில் நீராடிவிட்டு, கடம்பவனேஸ்வரரை வணங்கினால், காசிக்கு சென்று தரிசனம் செய்வதற்கு சமம்.
கடம்பவனேஸ்வரர் கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள மூன்று இடங்களில், பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் லாரி, கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்
சுவரில் பல வண்ணக்கலர்களில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் வாகனங்களை நிறுத்துவதால், சுவர் தெரிவதில்லை. மேலும், நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
பொது மக்கள் நலன் கருதி, கோவில் தேர்வீதி பாதையில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகழிமலை கோவிலில்
கிருத்திகை சிறப்பு பூஜை
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தை மாத வளர்பிறை கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு, தை மாத வளர்பிறை கிருத்திகையையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார்.
மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், தை மாத வளர்பிறை கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
ஹிந்து வழக்கறிஞர்கள்
முன்னணி கூட்டம்
குளித்தலையில், நேற்று ஹிந்து வழக்கறிஞர்கள் முன்னணி கூட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பின், நிருபர்களிடம் சரவணன் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிந்து வழிபாட்டு முறைகளை, தி.மு.க., அரசு தொடர்ந்து அடக்குமுறைகளை கொண்டே கையாண்டு வருகிறது. குளித்தலை கடம்பன்
துறையில் தொன்று தொட்டு நடந்து வரும் தைப்பூச திருவிழாவை, கடம்பவனேஸ்வரர் கோவில் பாலாலயம் செய்யப்பட்டதால், விழா நடைபெறாது என, செயல் அலுவலர் அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது விழா நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஹிந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக நடத்திட வேண்டும். ஜன., 25ல், உலக நன்மைக்காகவும், கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நலம் பெற வேண்டி தைப்பூசத் திருவிழாவை சிறப்பாக நடத்திட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
வக்கீல்கள் ஜெயந்தி, தமிழ்ச்செல்வி உடன் இருந்தனர்.
மாசாணியம்மன் கோவிலில்
சிறப்பு அபிஷேக வழிபாடு
கரூர், சின்னதாராபுரம் நெடுஞ்சாலை எல்லமேடு அருகே மாசாணியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இங்குள்ள சித்தி விநாயகர், கருப்பண்ண சுவாமி, ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் க.பரமத்தி குப்பம் பெரியகாண்டியம்மன் கோவிலில், பெரியகாண்டியம்மன், விநாயகர், குன்னுடையான், பொன்னர் சங்கர், தங்காயி, ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமூண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பவானியிலிருந்து பழநிக்கு
பக்தர்கள் பாத யாத்திரை
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி மலை முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்தனர். இந்நிலையில் பவானி பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று மாலை வழிபாடு செய்து, பாதயாத்திரையாக கிளம்பினர்.
முன்னதாக சரக்கு வாகனங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டனர். பல பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி சுமந்தபடியும் அணிவகுத்து சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டைகளை, நகர்மன்ற தலைவர் சிந்துாரி வழங்கினார்.
மாணவர்கள் 270 பேருக்கு
நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வு
'மாவட்ட மைய நுாலகத்தில், 270 மாணவ, மாணவியருக்கு, நீட் தேர்வுக்கான மாதிரி போட்டி நடத்தப்படுகிறது' என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4(வி.ஏ.ஓ.) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் -போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடக்கிறது. இதுபோல, மாவட்ட மைய நூலகத்தில், 175 பேர், குளித்தலை கிளை நுாலகத்தில், 40 பேர், கிருஷ்ணராயபுர கிளை நுாலகத்தில், 30 பேர், அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், 25 பேர் என மொத்தம், 270 பேர் நீட் தேர்வுக்கான மாதிரி போட்டித் தேர்வு எழுத உள்ளனர்.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது பாட புத்தகங்களில் உள்ள தகவல்கள், விளையாட்டு, அரசியல், பொது அறிவு, நடப்புச் செய்திகள் ஆகியவைகளை குறிப்பு எடுத்து தகவல்களை சேகரித்து படிக்க வேண்டும் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து மாணவர்கள் போராடுங்கள் தோல்விதான் வெற்றிக்கு முதல் படியாக அமையும்.
இவ்வாறு கூறினார்.
மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை தலைவர் குணசேகரன், பொருளாளர் .முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
உறியடி வெங்கட்ரமண பெருமாள்
கோவிலில் 22ல் சிறப்பு வழிபாடு
புஞ்சைகாளகுறிச்சியில் உள்ள உறியடி ஸ்ரீ வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்று, 1,008 அகல் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடக்கிறது. க.பரமத்தி ஒன்றியம், புஞ்சை
காளகுறிச்சியில் உறியடி ஸ்ரீ வெங்கட்ரமணபெருமாள் கோவிலில், ராமர் பாதம் உள்ளது. இதற்கு முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, அன்று ராமர் பாதம் உள்ள இடத்தில் உலக நன்மைக்காகவும், ஊர் மக்கள் நன்மைக்காகவும், ஸ்ரீ ராம நாமம் ஜெபித்து, 1,008 அகல் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு
அன்னதானம் வழங்கப்படுகிறது.
கரூரில் சட்டக்கல்லுாரி; கொ.ம.தே.க., தீர்மானம்
கரூர் மேற்கு மாவட்ட கொ.ம.தே.க., பொதுக்குழு கூட்டம், மாநில துணை பொதுச்செயலாளர் சக்தி நடராஜன் தலைமையில், சின்னதாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கூட்டத்தில், அமராவதி ஆற்றின் உபரிநீரை பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் சட்டக்கல்லுாரி அமைக்க வேண்டும். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். புதிய தாலுகாவாக க.பரமத்தியை அமைக்க வேண்டும். தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
க.பரமத்தியில், தேங்காய் பருப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலர் ஈஸ்வரன், பொருளாளர் பாலு, வர்த்தக அணி செயலர் சண்முகம், மாவட்ட செயலர் கார்த்தி, இளைஞர் அணி செயலர்கள் ரஞ்சித், சிவநித்தின் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வஞ்சுலீஸ்வரர்
கோவிலில் பா.ஜ.,
சார்பில் உழவார பணி
கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், வஞ்சுலீஸ்வரர் கோவிலில் உழவார பணிகள் நேற்று நடந்தது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபி ேஷகம் நடக்கிறது. அதையொட்டி, பா.ஜ., சார்பில் கோவில்களில் உழவார பணிகள், வீடுகளில் விளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், தலைவர் செந்தில் நாதன் தலைமையில், நேற்று வஞ்சுலீஸ்வரர் கோவில் மற்றும் தெப்பக் குளத்தில் உழவார பணிகள் நடந்தன. மாவட்ட பொதுச்
செயலாளர்கள் சக்திவேல் முருகன், கோபிநாத், நகர தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட, பா.ஜ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோதண்டராமஸ்வாமி கோவிலில் நாளை விசேஷ ஹோமம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சணப்பிரட்டி கோதண்டராமஸ்வாமி கோவிலில் விசேஷ ஹோமம் நடக்கிறது.
அமராவதி நதியின் கரையில் உள்ள சணப்பிரட்டி கிராமம், 15 நுாற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சியில் முக்கிய ஊர்களில் ஒன்றாக இருந்தது. ராணிமங்கம்மாள் காலத்தில், முக்கிய அதிகாரியான சென்னப்ப ரெட்டி என்பரால், சணப்பிரட்டி அக்ரஹாரத்தில் கோதண்டராமஸ்வாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, தேவிசீதாபிராட்டியை தேடி இலங்கை நோக்கி சென்ற போது, அமராவதி நதிக்கரையில் உள்ள சணப்
பிரட்டியில் ஒரு இரவு ராமர் தங்கியிருந்ததாக தலவரலாறு கூறுகிறது. இத்தகைய பெருமைமிக்க கோவிலை கடந்த, 2010ம் ஆண்டு நரசிம்ம சமுத்திரம் மன்றம் என்ற அமைப்பு, ஓரளவு புனர்நிர்மானம் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
கருவறையில் அழகனாக ஸ்ரீராமபிரான், கற்பிற்கோர் அணிகலனாக அன்னை சீதை, ஸ்ரீ ராமகைங்கர்யத்தில் உயர்ந்தவனான ஸ்ரீ லட்சுமணன், ஸ்ரீ ராமதாசனான ஸ்ரீ அனுமன் மூலவர்களாக சேவை தருகின்றனர்.
இந்நிலையில், உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு, சணப்பிரட்டி கோதண்டராமஸ்வாமி கோவிலில், காலையில் விசேஷ ஹோமங்கள், அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

