ADDED : ஜன 24, 2024 10:11 AM
தைப்பூச திருவிழாவையொட்டி
தேர் தயார் செய்யும் பணி தீவிரம்
புகழிமலை பாலசுப்பிரமணிய கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி தேர் தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, 19 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கட்டளைதாரர்களின் மண்டக படி பூஜை நடந்து வருகிறது. இன்று காலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு தைப்பூச திருவிழா வையொட்டி, தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி, தேரை தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும், 30ல் கொடியிறக்கம் மற்றும் விடை யாத்தி நிகழ்ச்சியுடன், தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுபாட்டில் விற்பனை
6 பேர் கைது
கரூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தோகமலை, வெள்ளியணை, மாயனுார், குளித்தலை, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக குழந்தைவேல், 61; சந்திரா, 45; ரங்கர், 50; செல்வி, 49; சுதாகர், 24; ரங்கசாமி, 40; ஆகிய, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாய தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், செயலாளர் தங்கவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பயனற்ற உழவர் பாதுகாப்பு திட் டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், கடந்த, 1996 ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த, விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்துக்கு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, 15 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய பா.ஜ., அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., கட்சி செயலாளர் நாட்ராயன், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் பாலன், தங்கராஜ், அஞ்சலி தேவி, ஆண்டியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்
டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார் பில், 291 வது இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அதில், காகித ஆலையை சுற்றியுள்ள ஓனவாக் கல் மேடு, நாணப்பரப்பு, கந்த சாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன் புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதி களில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
அதில், காகித ஆலை டாக்டர்கள் அடங்கிய குழுவினர், 190 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில் சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்று கோளாறு, மூட்டுவலி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கரூரில் கொசு ஒழிப்பு பணியை
தீவிரப்படுத்த கோரிக்கை
கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் நான்கு மண்டலங்களாக பிரித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை பெய்யாவிட்டாலும், சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கொசுக்களின் உற்பத்தி அதிகளவு இருந்து வருகிறது. இரவு நேரங்களில் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு, மாநகராட்சிக்குட்ப்டட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு சீத்த முட்செடிகள் ஆக்ரமிப்பும் காரணமாக உள்ளது.
குப்பை தரம் பிரித்து சேரிக்கப்பட்ட வந்த நிலையில், கொசுவினை முற்றிலும் அழிக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீடு தோறும் கொசு மருந்து அடிப்பது, அபேட் மருந்து வழங்குவது, குளோரினேஷன் கலந்த தண்ணீர் விநியோகம் செய்வது போன்ற பணிகளை விடாது மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அகற்ற வேண்டும்
வடக்குபாளையம் அருகே முலகாட்டனுார் பகுதியில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருர் திருச்சி சாலையில் காந்திகிராமம் அடுத்துள்ள வடக்குபாளையம்
பகுதிக்கு முன்னதாக, மூலக்காட்டனூர் பிரிவுச் சாலை செலகிறது.
இந்த பகுதிக்கு எதிரே சாலையோரம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி உள்ளது.
தற்போது, அந்த தொட்டியால் எந்தவித பயனும் இல்லை. ஆனால், சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில் தொட்டி வளாகம் உள்ளதோடு, தொட்டியின் பாகங்கள் அனைத்தும் சிதிலடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இதை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈர நில தினத்தையொட்டி
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை சார்பில், உலக ஈர நில தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், நீர்நிலைகள், ஈர நில பகுதிகள், சதுப்பு நிலை இடங்களை பாதுகாக்க வேண்டும் என, உறுதிமொழி எடுத்து கொண்டனர். மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் வேலுசாமி, தலைமையாசிரியர் ரேவதி, பசுமை தோழர் கோபால், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி உள்பட, பலர் பங்கேற்றனர்
க.பரமத்தி அருகே பா.ஜ.,
அலுவலகம் திறப்பு விழா
க.பரமத்தி வடக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா, காருடையாம் பாளையத்தில் நடந்தது.
அலுவலகத்தை மாவட்ட, பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து, க.பரமத்தி வடக்கு ஒன்றிய பகுதிகளில், பா.ஜ., கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், செயலாளர் செல்வராஜ், அரவக்குறிச்சி தொகுதி அமைப்பாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதியில்கொய்யா விற்பனை ஜோர்
கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் பரவலாக கொய்யா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, செடிகளில் கொய்யாக்காய் நன்கு காய்த்து வருகிறது. பழுத்த பழங்களை பறித்துவந்து, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைவீதிகளில், கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்து விருகின்றனர். கொய்யாப்பழம் சுவையாகவும், சத்து நிறைந்தும் உள்ளதால், மக்கள் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த விற்பனையால் வியாபாரிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், வரும் எம்.பி., தேர்தலில் நிர்வாகிகளின் செயல்பாடுகள், பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகள், தி.மு.க., அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து, பொதுமக்களிடம் பிரசாரம் செய்தல், தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்குதல் குறித்து மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் மல்லிகா, ஆலம் தங்கராஜ், பொருளாளர் கண்ணதாசன், முன்னாள் மாநகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மரவள்ளி சாகுபடியில்களை அகற்றம் தீவிரம்
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, சிவாயம், வரகூர், கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி, வயலுார், சரவணபுரம் ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, மரவள்ளி செடிகளின் நடுவே களைகள் வளர்ந்துள்ளதால், செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த களைளை அகற்றினால், கிழங்குகள் நன்கு திரண்டு வளரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
குடியரசு தின எதிரொலி
போலீசார் சோதனை
குடியரசு தினத்தையொட்டி, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
நாடு முழுவதும் வரும், 26ல்
குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள் ளது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.
நேற்று காலை கரூரில் பஸ் ஸ்டாண்ட், மனோ கரா கார்னர், ஜவஹர் பஜார் உள்ளிட்ட, பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி யில், மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., குமார் தலைமையில், போ லீசார் மெட்டல் டிடேக்டர் கருவி மூலம் சோ தனை செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர்.
நிதி நிறுவன
ஊழியர் மாயம்
குளித்தலை அடுத்த புலியூர் வடக்கு தெரு கிராமத்தை சேர்ந்தவர் அஜித், 26; இவர், கரூர் தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
தனது தாய் மாமா வீடான, வரவணை பஞ்., மேலசர்க்கரை கோட்டை ராமன், 38, என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் வீட்டில் இருந்து, கரூருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது தாய்மாமா ராமன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகள் மாயம்
குளித்தலை அடுத்த பாதிரிப்பட்டி பஞ்., இந்திரா நகரை சேர்ந்தவர் தனலட்சுமி, 46; கூலித்தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா, 19. இவரை, நேற்று முன்தினம் முதல் காணவில்லை என, தாய் தனலட்சுமி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூரில் சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கரூர் மண்டல அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கரூர் மண்டல போக்கு வரத்து கழக பயிற்சி வாகனம் மூலம், சாலை பாதுகாப்பு குறித்து, டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. மேலும், சாலை பாது காப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
கரூர் மண்டல போக்குவரத்து பொது
மேலாளர் சிவசங்கரன், உதவி மேலாளர் சேகர், உதவி பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடந்த, 15 முதல் வரும் பிப்., 14 வரை நடக்கிறது.
மேகபாலீஸ்வரர் கோவிலில்
தை மாத பிரதோஷ விழா
வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகமாலீஸ்வரர் கோவிலில், நேற்று தை மாத பிரதோஷ விழா நடந்தது.
அதில், நந்தி சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, தை மாத பிரதோஷத்தையொட்டி, மூலவர் மேகமாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இடிந்து விழும் நிலையில்
அரசு பள்ளி மேற்கூரை
இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி மேற்கூரையை சரி செய்ய வேண்டும்.
அரவக்குறிச்சி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி நுழைவாயில் அருகே உள்ள கட்டடத்தின் மேற்கூரை விழும் நிலையில் உள்ளது. இதை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பழைய கட்டடங்கள் மற்றும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தால், அதனை அகற்றக்கோரி உத்தர விட்டுள்ளனர். இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மேற்கூரை விழும் நிலையில் உள்ளதால், இதை அகற்ற வேண்டும் என, மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதயாத்திரை பக்தர்களுக்கு
ஜூஸ் வழங்கிய இஸ்லாமியர்
பாதயாத்திரையின் போது பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் ஜூஸ் வழங்கினர்.
பள்ளப்பட்டி, அண்ணா நகரில் குத்புதீன் தர்கா வளாகத்தில் இஸ்லாமியர் சார்பில், பள்ளப்பட்டி வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குளிர்பானம், குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் மொபைல்போன் சார்ஜ் செய்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் நடந்து செல்வதால், அவர்களுக்கு கால் வலிக்கு மருந்துகளை வழங்கினர். இளைப்பாற ஷாமியானா பந்தல் அமைத்து கொடுத்திருந்தனர்.
இதுகுறித்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இஸ்லாமியர்கள் கூறுகையில், 'பள்ளப்பட்டியை சேர்ந்த இஸ்லாமியர்கள், ஆண்டுதோறும் பழநி செல்லும் பக்தர்களுக்கு நற்பணிகளை செய்து வருகிறோம். இதனால் மாற்று மத சகோதரர்களிடையே, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்,' என்றனர்.
கடன் பணம் கேட்டு 'டார்ச்சர்'
பெண் தற்கொலை: மூவர் கைது
கரூரில், தற்கொலை செய்து கொண்ட பெண்ணிடம், கடன் பணத்தை கேட்டு டார்ச்சர் செய்ததாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்லானி, 42. இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் சாகுல், 40, என்பவருக்கு தனியார் நிதி நிறுவனம் மூலம், 'டிவி', மொபைல் போன், ஆகியவற்றை ஜாமின் கையெழுத்து போட்டு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், சாகுல் உரிய நேரத்தில் நிதி நிறுவனத்துக்கு பணம் செலுத்தவில்லை. இதனால், நிதி நிறுவன ஊழியர்கள் ஜெய்லானியின் மனைவி பாத்திமா பீவியிடம், 36, பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து, மனம் உடைந்த பாத்திமா பீவி கடந்த, 20ல் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜெய்லானி கொடுத்த புகார்படி, நிதி நிறுவனத்தை சேர்ந்த சந்திரசேகரன், 65, கார்த்தி, 32, நாகராஜ், 22, ஆகிய மூவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கல்யாண பசுபதீஸ்வரர்
கோவிலில் பிரதோஷ விழா
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, தை மாத பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடந்தது.
வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில்
ரூ.23.26 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே, சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய் கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஏலம் நடக்கிறது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள், தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், 10,902 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். குறைந்தபட்சம் ஒருகிலோ, 20.90 ரூபாய், அதிகபட்சம், 25.65 ரூபாய், சராசரி, 23.69 ரூபாய் என, 3,491 கிலோ தேங்காய்கள், 83,812 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், கொப்பரை தேங்காய், முதல்தரம் ஒருகிலோ குறைந்தபட்சம், 79.79 ரூபாய், அதிகபட்சம், 88.16 ரூபாய், சராசரி, 86.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சம், 60.35 ரூபாய், அதிகபட்சம், 85.29 ரூபாய், சராசரி, 71.45 ரூபாய் என, 31,119 கிலோ கொப்பரை தேங்காய், 22 லட்சத்து, 43,037 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 23.26 லட்சத்துக்கு விற்பனையானதாக விற்பனைக்கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

