/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி சரிவு: வெளிமார்க்கெட்டில் நெல் விலை கிடுகிடு உயர்வு
/
டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி சரிவு: வெளிமார்க்கெட்டில் நெல் விலை கிடுகிடு உயர்வு
டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி சரிவு: வெளிமார்க்கெட்டில் நெல் விலை கிடுகிடு உயர்வு
டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி சரிவு: வெளிமார்க்கெட்டில் நெல் விலை கிடுகிடு உயர்வு
ADDED : பிப் 02, 2024 04:48 PM
கரூர்:டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி சரிவு காரணமாக, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.மேட்டூர் அணை கடந்தாண்டு ஜூன், 12ல் திறக்கப்பட்டாலும், போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், அக்., 10ல் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர் உள்பட டெல்டா மாவட்டங்களில், 10.20 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆற்று பாசன பகுதிகளில் நீர் ஆதாரம் இல்லாததால் நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி பருவத்தில் இயல்பான பரப்பளவை விட, குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில், நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இத குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் சாமி.நடராஜன் கூறியதாவது:காவிரியில் போதிய நீர் வரத்து இல்லாததால், நிலத்தடி நீரை நம்பி சாகுபடி நடந்தது. தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் குறைந்துள்ளது. கடந்தாண்டை விட சன்ன ரகம் நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. வெள்ளை பொன்னி ஒரு மூட்டை (62 கிலோ) 1,500 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாய், பி.பி.டி. 5204 (ஆந்திரா பொன்னி) ஒரு மூட்டை, 1,300 லிருந்து, 1,800 ரூபாய், ஜே.ஜி.எல்.,(கர்நாடகா பொன்னி) ஒரு மூட்டை, 1,100 லிருந்து, 1,600 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஐ.ஆர்.20 போன்ற பொது ரக நெல் விலை ஒரு மூட்டை, 1,150 லிருந்து, 1,300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இருப்பினும், அரசு நெல் கொள்முதல் நிலையில் பொது ரக நெல்களுக்கு ஒரு மூட்டை, 1,404 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது வெளி மார்க்கெட்டை விட கூடுதல் என்றாலும், கொள்முதல் நிலையங்களில் நடக்கும் குளறுபடிகளால், வெளிமார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து விடுகின்றனர். நெல் விலை உயர்வால், அரிசி விலையும் உயரும்.இவ்வாறு கூறினார்.தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன மாநில செயலர் மோகன் கூறியதாவது: தமிழகத்திற்கு, 90 லட்சம் மெ.டன் அரிசி தேவைப்படும் நிலையில், 70 முதல், 75 லட்சம் மெ.டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும், சன்னரக அரிசி உற்பத்தி, 30 சதவீதம் மட்டுமே நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொள்முதல் செய்ய வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.உள்நாட்டில் விலை உயர்வு ஏற்படும் என்பதால், பச்சரிசி ஏற்றுமதிக்கு தடையும், புழுங்கல் அரிசிக்கு, 20 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு ஏற்றுமதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் நெல் ஏற்றுமதி நடப்பதாலும், கர்நாடகா அரசு இலவச அரிசி வழங்க அதிகளவு நெல் கொள்முதல் செய்வதாலும், தமிழக வரத்து குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நெல் கொள்முதல் விலை நிலை உயர்ந்துள்ளது.இவ்வாறு கூறினார்.

