/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
/
காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ADDED : செப் 26, 2025 01:45 AM
குளித்தலை, செப். 26
குன்னுடையான் கவுண்டம்பட்டியில், காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கீரனுார் பஞ்., பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குன்னுடையான் கவுண்டம்பட்டியில், நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு காற்றாலை வேண்டாம் என கூறி நேற்று காலை 11:00 மணியளவில் தளவாட பொருட்கள் கொண்டு வந்த லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தோகைமலை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காற்றாலை அமைத்தால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என கூறிய பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கீரனுார் பஞ்., குன்னுடையான் கவுண்டம் பட்டியில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. தற்போது இப்
பகுதியில் காற்றாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்காக தளவாடப் பொருட்கள் பெரிய கனரக வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. இதற்காக சாலையோரம் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டி வருகின்றனர். விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதால், குட்டை போன்ற சிறிய நீர்நிலைகளை மண் கொட்டி பாதை அமைத்து, மழைநீர் செல்லும் பாதையை தடுத்துள்ளனர்.
விவசாயம் பாதிக்கப்பட்டு, மற்ற வேலைகளுக்கு வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே, இப்பகுதியில் காற்றாலை அமைப்பதை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு தடுத்து நிறுத்தி விவசாயத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.