ADDED : ஜன 19, 2024 12:00 PM
சாலையில் குவியும் குப்பை
அகற்ற நடவடிக்கை தேவை
சாலையில் குவியும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் -- சேலம் பழைய சாலையில் உள்ள செம்மடை பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பையை கொட்ட போதிய, சேகரிப்பு தொட்டிகள் வைக்கவில்லை. அப்பகுதி பொதுமக்கள் சாலை ஓரத்தில், குப்பைகளை கொட்டி வருகின்றனர். காற்றடிக்கும் போது குப்பை பறந்தபடி உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற, குப்பை சேகரிப்பு தொட்டிகள் வைக்க வேண்டும்.
காந்திகிராமம் இ.பி., காலனியில்
சாலை வசதி கிடைக்குமா?
கரூர், காந்திகிராமம், இ.பி., காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நாள்தோறும் ஏராளமானோர் வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று சென்று வருகின்றனர். இங்குள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் கஷ்டப்பட்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழும் சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. மழை காலங்களில், இந்த சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, சாலை வசதியை செய்து தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கோவை சாலையில் கார்களை
நிறுத்துவதால் கடும் பாதிப்பு
கோவை சாலையில் கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து
பாதிப்பு ஏற்படுகிறது.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலை போக்குவரத்து மிகுந்ததாக உள்ளது. ஆனால், கோவை சாலையில், சிலர் பல மணி நேரம் கார்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதி வழியாக பஸ் ஸ்டாண்டில் இருந்து, பஸ்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, கோவை சாலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கார்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

