ADDED : ஜன 24, 2024 10:15 AM
செயல்படாத சிக்னல்
வாகன ஓட்டிகள் அவதி
கரூர்-திருச்சி சாலையில் தனியார் சிமென்ட் ஆலை அருகில், போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், உப்பிடமங்கலம் பிரிவில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. பல மாதங்களாக சிக்னல் சரிவர இயங்கு வதில்லை. மேலும், சிக்னலை சுற்றி விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. கரூரில் இருந்து திருச்சிக்கு பஸ்கள் உள்ளிட்ட
நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. எனவே, வளர்ந்து வரும் நகரான புலியூரில் உள்ள, தனியார் சிமென்ட் ஆலை அருகில் விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைக்கப்பட்டுள்ள,
தானியங்கி சிக்னலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை கால்வாயை
சுத்தம் செய்ய வேண்டும்
கரூர் அருகே, திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து பணிமனை
பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளது. மேலும், அதிகளவில் செடிகளும் முளைத்துள்ளது. இதனால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல இடங்களில் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் செல்லும்
நிலை உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தொற்று நோய்
அபாயத்தில் உள்ளனர் எனவே, சாக்கடை கால்வாயில் உள்ள செடிகள்,
கழிவுகளை அகற்றி, துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்கிய குப்பையால்
பொதுமக்கள் அவதி
கரூர் அருகே வாங்கல் சாலையில், சேகரிப்பு தொட்டிகள் இல்லாததால், பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனர். பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. காற்று பலமாக வீசும் போது குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பைகளை சாலை நடுவே இழுத்து விட்டு செல்கிறது. வாகன ஓட்டிகள் தடுமாறி, கீழே விழுகின்றனர். குப்பைகள் அழுகும் முன், தள்ளுவண்டி மூலம் தேங்கிய கழிவுகளை உடனடியாக அகற்ற, கரூர் மாநகராட்சி
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் குப்பை
தொட்டிகளை அமைக்க வேண்டும்.

