/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகளுக்கு பதிலாக ரேஷன் கடையில் தி.மு.க., நிர்வாகி: பொங்கல் பரிசு கொடுத்ததால் அ.தி.மு.க., கவுன்சிலர் எதிர்ப்பு

ADDED : ஜன 14, 2024 12:18 PM
ஓசூர்: ஓசூரில், ரேஷன் கடையில் ஊழியரான மகளுக்கு பதிலாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர், பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கியதால், அ.தி.மு.க., கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், 2 மணி நேரம் பொங்கல் தொகுப்பு கிடைக்காமல், மக்கள்
சிரமப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் 1,000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஓசூர் மாநகராட்சி, 3 வது வார்டுக்கு உட்பட்ட பேடரப்பள்ளி ரேஷன் கடையில், 1,395 ரேஷன் அரிசி அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. சரியான நேரத்தில் பொங்கல் தொகுப்பை வழங்காமல், இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, அப்பகுதி மக்கள் ரேஷன் கடை முன் திரண்டனர். அங்கு அப்பகுதி, அ.தி.மு.க., கவுன்சிலர் ரஜினிகாந்த் வந்தார். அப்போது கடை விற்பனையாளர் சுதா என்பவருக்கு பதிலாக, அவரது தந்தையும், தி.மு.க.,வை சேர்ந்தவருமான முனிகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி கொண்டிருந்தார்.
இது பற்றி கவுன்சிலர் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முனிகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகையை எடுத்து கொண்டு, ரேஷன் கடையை மூடாமல் அப்படியே விட்டுச்சென்றார்.
இதனால், 200 க்கும் மேற்பட்டோர், 2 மணி நேரத்திற்கும் மேலாக ரேஷன் கடை முன் காத்திருந்தனர். வட்ட வழங்கல் தனி தாசில்தார் பெருமாள் அங்கு வந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விற்பனையாளர் சுதா மூலமாக பொங்கல் தொகுப்புகளை வழங்க ஏற்பாடு செய்தார். முனிகிருஷ்ணனை கடைக்கு வரக்கூடாது என எச்சரித்து அதிகாரிகள் அனுப்பினர். அங்கு, சிப்காட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.