sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 14, 2024 12:07 PM

Google News

ADDED : ஜன 14, 2024 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூரில் கடுங்குளிரால்

பொதுமக்கள் அவதி

தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக கடுங்குளிர் நிலவுகிறது. இரவு முதல், காலை, 8:00 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதன் பிறகே வெயில் அடிக்க துவங்குகிறது. கடும் குளிரை சமாளிக்கும் விதமாக நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா அணிந்து செல்கின்றனர். காலையில் கூலி வேலைக்கு மற்றும் பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள், இந்த கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இளம்பெண் மாயம்

தர்மபுரி அடுத்த சவுளுப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் - பார்வதி தம்பதியின், 2 வது மகள் நந்தினி, 22, கல்லுாரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தி.மு.க., ஐ.டி., விங்ஸ்

பிரிவினருக்கு பயிற்சி

தர்மபுரி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு, சமூக ஊடகங்களுக்கான பயிற்சி, மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் வழங்கப்பட்டது. இதில், சமூக வலைதளங்களில் ஊடக பயிற்சி அளிக்கப்பட்டது. இளைஞரணி, மாணவர், மகளிர், வக்கீல், பொறியாளர், மருத்துவர் அணி உள்ளிட்ட பல்வேறு கழக சார்பு அணியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி பணிக்காக அனைவரும் இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சாமந்தி பூ விலை உயர்வு

விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு சாமந்தி பூ விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை வருவதால், சாமந்தி பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாமந்தி பூவை சாகுபடி செய்துள்ளனர். தொடர்மழையால், பல இடங்களில் பூக்கள் அழுகியதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வரை, ஒரு கிலோ சாமந்தி பூக்களை வியாபாரிகள் கிலோ, 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்குவதால், நேற்று, ஒரு கிலோ சாமந்தி, 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. வரும் நாட்களில், பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அதேபோல், மல்லிகை, முல்லை ஆகியவற்றின் விலை அதிகரித்து, கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.19.41 லட்சத்துக்கு

பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 15 க்கும் குறைவான விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை அதிகரித்து, நேற்று முன்தினம், 19 பேரும் நேற்று, 54 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 119 குவியல்களாக, 4,660 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 282 முதல், 483 ரூபாய் வரை சராசரியாக, 416 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 19.41 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 29,134 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

பொங்கல் விழா நடத்த

பேச்சுவார்த்தை தோல்வி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குண்டங்காடு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் முன், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையில், பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், பொதுமக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து விழா நடத்த முடிவு செய்ததால், இரு தரப்பிற்கும் இடையே முதலில் யார் பொங்கல் வைப்பது என்ற தகராறு ஏற்பட்டது.

இது குறித்து, பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், இரு தரப்பும், தாங்கள் தான் முதலில் பொங்கல் வைத்து பூஜை செய்வோம் என தெரிவித்தனர். இதில் சமரசம் ஏற்படாததால், சமரசம் ஏற்பட்ட பின், திருவிழாவை நடத்திக்கொள்ள தாசில்தார் ஆறுமுகம் அறிவுறுத்தினார்.

பெண்கள் குழு விளையாட்டு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி மாவட்ட பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார். ஆண்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் இன்று காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது. இக்குழு விளையாட்டு போட்டிகளில், 17 வயதிற்கு மேற்பட்ட தர்மபுரி மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களுக்கான கபடி, வாலிபால் மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றது.

இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேட்பாரற்று கிடந்த மொபைலை

போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சவுளூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கைலாசம், 45; நேற்று முன்தினம் மாலை கைலாசத்தின் மகன் அன்பரசு, சேசம்பட்டி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஒன் பிளஸ் மாடல் மொபைல்போன் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது. அதை தன் தந்தை கைலாசத்திடம் கொடுத்துள்ளார். கைலாசம் அதை, தர்மபுரி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் நேற்று ஒப்படைத்தார். இச்செயலுக்கு கைலாசத்தை டி.எஸ்.பி., செந்தில்குமார் பாராட்டினார். அப்போது, டவுன் எஸ்.ஐ.,க்கள் உதயகுமார், ரங்கசாமி, இளமதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொங்கலுக்கு ஊர் திரும்பும்

மக்களால் கூட்ட நெரிசல்

தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திற்கு பணி நிமித்தமாக சென்றிருந்த, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் திருவிழாவிற்காக சொந்த ஊர் திரும்புகின்றனர். மேலும், பொங்கல் கொண்டாட்டத்திற்காக புத்தாடைகள் வாங்கவும், பொங்கலுக்கு தேவையான பானை, பூஜை பொருட்கள், கரும்பு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு, பொதுமக்கள் அதிகளவில், தர்மபுரி நகர பகுதியில் குவிய தொடங்கினர். வெளியூரிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை நேற்று காலையிலிருந்து அதிகரித்தது.

பொங்கல் பண்டிகை, 4 நாட்கள் திருவிழா என்பதால் ஒட்டுமொத்தமாக வெளியூர் சென்றிருந்த மக்கள் அனைவரும், ஒரே நாளில் அதிகளவில் சொந்த ஊர் திரும்புகின்றனர். இதனால், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரூட் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூரில் உள்ளவர்கள் என அனைவரும், ஜவுளி கடைகள் பஸ் ஸ்டாண்ட்களில் ஒரே சமயத்தில் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

விஜயகாந்த் 15வது நினைவு தினம்

கடத்துார் ஒன்றியம்,மோசிநாய்க்கனஹள்ளியில் மறைந்த விஜயகாந்த்தின், 15வது நாளையொட்டி ஓசஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார், ஒன்னல்வாடி அருகே வி.ஜி.பி., லேஅவுட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு டிப்பர் லாரிகளை சோதனை செய்ய நிறுத்தினர். ஆனால், டிரைவர்கள் லாரிகளை சிறிது துாரத்திற்கு முன் நிறுத்தி விட்டு தப்பியோடினர். லாரிகளில் சோதனை செய்த போது, ஒன்னல்வாடியில் இருந்து ஓசூருக்கு மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. 3 யூனிட் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர்.

மின்வேலியில் சிக்கி பெண் பலி

கிருஷ்ணகிரி அடுத்த ராமர்கொட்டாயை சேர்ந்தவர் பட்டு, 55; இவர் கடந்த, 11ல், தானம்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பும் போது, ராமர் கொட்டாய் அருகில் உள்ள விவசாய நிலத்தின் கம்பியை பிடித்த போது, மின்சாரம் தாக்கி பலியானார். விசாரணையில், காட்டுப்பன்றி வருவதை தடுக்க, நிலத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்துள்ளதும் அதை தொட்டதால், பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி மாயம்; கணவர் புகார்

கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர் மோட்டூரை சேர்ந்தவர் எப்சி, 35; அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், கடந்த, 3ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் தேவசெல்வம், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சேலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் குடியிருப்பில்

சமத்துவ பொங்கல் விழா

பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள போலீசார் குடியிருப்பு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன் தலைமை வகித்தார். இதில், போலீசார் தங்கள் வீடுகளில் வண்ண கோலமிட்டு மா, வாழை தோரணங்கள் கட்டி, குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை புத்தாடைகள் அணிந்து, பொங்கல் விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இன்ஸ்பெக்டர் தங்கதுரை பரிசுகள் வழங்கினார்.

ஏ.டி.எஸ்.பி., சங்கு மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

அரிமா இயக்கத்தின் வித்தகர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாளையொட்டி, ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ஊத்தங்கரை அரிமா சங்கத்தின் சார்பில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையிலுள்ள, உள் நோயாளிகள் மற்றும் அவர்களோடு உள்ள உறவினர்கள் என, 120 பேருக்கு நேற்று உணவு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அரிமா சங்க தலைவர் லட்சுமி, செயலாளர்

புகழேந்தி, பொருளாளர் தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மதன்குமார், மாவட்ட பயிற்றுனர் நுாருல்லா ஷெரீப் மற்றும் பத்மநாபன், நகுலன், ராஜா, மூர்த்தி, சங்க உறுப்பினர்கள் ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர்.

புல்லட் கவிழ்ந்து விபத்து

ஐ.டி., ஊழியர் பலி

சேலம் மாவட்டம், தென் அழகாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த், 30; பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐ.டி.,ஊழியராக பணிபுரிந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை புல்லட்டில் கிருஷ்ணகிரி நோக்கி வந்துள்ளார். காலை, 8:45 மணியளவில் போத்தாபுரம் மேம்பாலத்தில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த புல்லட், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அரவிந்த் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவி உட்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் ஆர்த்தி, 20. தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த மாதம், 19ல் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை நேற்று முன்தினம் ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், பாலகிருஷ்ணன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர். சூளகிரி மில்லத் நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன், 32, தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 10ல் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி ஹேமலதா, 25, கொடுத்த புகார்படி, சூளகிரி போலீசார் தேடுகின்றனர்.

இரட்டை கொலையில்

மேலும் இருவர் கைது

ஓசூர் அலசநத்தம் தோட்டகிரி சாலையை சேர்ந்தவர் பர்கத், 30; ஆவலப்பள்ளி ஹட்கோ பழைய வசந்த் நகரை சேர்ந்தவர் சிவா, 27; இருவரும் கடந்த மாதம், 20ல், வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதில், 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 15 பேரை டவுன் போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இக்கொலையில் தொடர்புடையதாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலங்கா பகுதியை சேர்ந்த பவன் கல்யாண், 23, கட்டிகேனஹள்ளியை சேர்ந்த நாகர்ஜூனா, 22, ஆகிய இருவரை, டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.

நாகப்பாம்பு மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் கீழ்வீதியில், மகேந்திரன் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது வீட்டில் நேற்று காலை, 9:00 மணிக்கு, ஐந்தடி நீள நாகப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் அரிசி டப்பாவில் மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, அருகிலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக

விட்டனர்.

பள்ளியில் சமத்துவ பொங்கல்

ஓசூர், காமராஜ் காலனியில் மாநகராட்சி தமிழ்வழி நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 1,600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பத்மாவதி தலைமையில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபட்டனர்.

ஓசூர், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி சாமி மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். தேன்கனிக்கோட்டை தாலுகா, பிக்கப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் விஜயகுமார் தலைமையில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

பஞ்., துணை தலைவரை

வெட்டிய விவசாயி கைது

ஓசூர் அருகே, பஞ்., துணைத்தலைவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.

ஓசூர் அடுத்த பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஹரிஷ்ரெட்டி, 43. கொத்தகொண்டப்பள்ளி பஞ்., துணைத்தலைவர்; கடந்த, 10 ல், பொம்மாண்டப்பள்ளி கிராமத்தில், எடப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 29, மற்றொருவருக்கும் நடந்த தகராறை ஹரிஷ்ரெட்டி தட்டிக்கேட்டு, ஒரு கட்டத்தில் மஞ்சு நாத்தை கையால் அடித்தார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த, 11ல் இரவு, 9:30 மணிக்கு, பொம்மாண்டப்பள்ளி சிவன் கோவில் அருகே நின்றிருந்த ஹரிஷ்ரெட்டியை, ஸ்கார்பியோ காரில் வந்த மஞ்சு நாத் மற்றும் அவரது தரப்பினர், அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில், இடது பக்க தலை, காது பகுதியில் படுகாயமடைந்தார். அவர் புகார்படி, மத்திகிரி போலீசார், பொம்மாண்டப்பள்ளி விவசாயி சீனிவாசன், 41, என்பவரை கைது செய்து, மஞ்சுநாத் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us