sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : பிப் 12, 2024 10:52 AM

Google News

ADDED : பிப் 12, 2024 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவுநீர் கால்வாயில்

விழுந்த தொழிலாளி பலி

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்ராம், 41; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலுார் சாலை பிருந்தாவன் நகரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்; கடந்த, 5ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். நேற்று முன்தினம் பிருந்தாவன் நகரிலுள்ள கழிவுநீர் கால்வாயில் சஞ்சய்ராம் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள், ஹட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, குடிபோதையில் கழிவுநீர்

கால்வாயில் தவறி விழுந்து சஞ்சய்ராம்

உயிரிழந்தது தெரிந்தது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

'கணக்கும் இனிக்கும்'

ஆசிரியர்களுக்கு பயிலரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஓசூர் அருகே பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரியில், கணித ஆசிரியர்களுக்கான, 'கணக்கும், இனிக்கும்' என்ற பயிலரங்கம் நடந்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சர்ஜான் வரவேற்றார். பி.எம்.சி., டெக் கல்லுாரி முதல்வர்கள் சித்ரா, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பி.எம்.சி., டெக் கல்லுாரி தலைவர் குமார்,

செயலாளர் மலர், இயக்குனர் சுதாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணி பேசினர்.

பயிலரங்கத்தில், நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், பயிற்சியில் பங்கேற்ற, 145 ஆசிரியர்களுக்கும், 'மஞ்சப்பை' வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'கணக்கும் இனிக்கும்' என்ற தலைப்பில், சென்னை கணித அறிவியல் கழக ஓய்வு பேராசிரியர் ராமானுஜம் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சேதுராமன், சூளகிரி கிளை செயலாளர் திருப்பதி

உட்பட பலர் பங்கேற்றனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை

மனுக்கள் பெற்ற எம்.எல்.ஏ.,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், வரட்டனப்பள்ளி பஞ்., சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டர்.

அப்போது, மக்களின் குறைகள் மீது தீர்வு காணப்படும் என உறுதியளித்த எம்.எல்.ஏ., மதியழகன், முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, வரும் பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க, மக்களை கேட்டுக்கொண்டார்.

மாநில விவசாய அணி செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், பொருளாளர் கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஜெகதாப், நெக்குந்தியில்

அரசு பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரி அடுத்த, நெக்குந்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் நாராயணசாமி வரவேற்றார். பஞ்., தலைவர் பானுப்பிரியா நாராயணன், ஊர்கவுண்டர் சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், கவுன்சிலர் வேடியப்பன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பள்ளி, மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை நடந்தன.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பி.டி.ஏ., தலைவர் மூர்த்தி, சமூக ஆர்வலர் விவேக் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் செல்வி நன்றி கூறினார்.

அதேபோல், காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜெகதாப் அரசு உயர் நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமையில் ஆண்டு விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் உத்திரகுமார் வரவேற்றார். மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மூவருக்கும், ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியருக்கும், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் காவேரி மற்றும் பஞ்., தலைவர் கன்னியம்மாள் ராமமூர்த்தி ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

தலையில் தேங்காய் உடைத்து

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கெலமங்கலம் அருகே, தலையில் தேங்காய் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி பஞ்., ஒசபுரம் கிராமத்தில், அஸ்வத்நாராயணா ரட்சை உள்ளது. இதன் மீது, நாகதேவதா, கணபதி ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோ பூஜை, 10:00 மணிக்கு கங்காபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தொட்டபேளூர் உட்பட, 7 கிராமங்களில் இருந்து, குரும்பர் மக்களின் குலதெய்வங்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தலையில் சுவாமியை சுமந்து பக்தர்கள் ஆடினர். மதியம், 1:00 மணிக்கு மாடுகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். எச்.செட்டிப்பள்ளி, கூட்டூர், ஜோதிபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில்களில் மக்கள்

குலதெய்வ வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பூதனுார் கிராமத்தில் பூதனுார், பாரண்டபள்ளி, கொரப்பநாய்க்கன்பட்டி, ஒட்டத்தெரு, மாடரஹள்ளி, பட்டகானுார், சரட்டூர், பாப்பானுார் உள்ளிட்ட, 12க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பங்காளிகள், பெருமாள் கோவிலில் குல தெய்வ வழிபாடு நடத்தினர்.

அலங்கரித்த தேரில் சுவாமியை வைத்து பூஜை செய்த பின், கோவிலை சுற்றி வலம் வந்தது. 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் பாரூர் அடுத்த, குடிமேனஹள்ளி கிராமத்தில், சென்றாயபெருமாள் மற்றும் எல்லையம்மன், மகாவீரகர சுவாமி கோவில்களில் திருவிழா நடந்தது. இக்கோவில்களில் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள, 87 கிராமங்களை சேர்ந்த பங்காளிகள் ஒன்று சேர்ந்து, சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும் மகாவீரகர சுவாமிக்கு, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்ட பக்தர்கள், தங்கள் உறவினர்களுக்கு கறி விருந்து படைத்தனர்.

இந்த திருவிழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி அரசு பள்ளி ஆண்டு விழா

கிருஷ்ணகிரியில், 168 ஆண்டுகள் பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல் சுப்பிரமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியை பத்மாவதி வரவேற்றார்.

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசும் போது, அரசின் பல்வேறு விதமான கல்வி சார்ந்த சலுகைகளை முறையாக பயன்படுத்தி கொண்டு, நல்ல முறையில் படித்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் மாணவர்கள் பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து, விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் முதல் இரு இடங்களை மாணவர்கள், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் பாட்டு, நடனம், நாடகம், இசைக்கருவி வாசித்தல் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி கட்டடங்களுக்கு வர்ணம் பூசு உதவியவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயராமன் பிள்ளை, சுப்பிரமணி, திம்மராஜ், உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

பூட்டிய வீட்டில் தீ விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் வரதராஜ், 50, கட்டட மேஸ்திரி; இவர் நேற்று விடுமுறை என்பதால், குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, ஷோபா, கட்டில், மெத்தை, புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. அக்கம் பக்கத்தினர் வரதராஜிற்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

வெற்றிலை விலை உயர்வு

தர்மபுரி மாவட்டம் கடத்துாரில், நேற்று நடந்த வெற்றிலை வாரசந்தைக்கு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலை கொண்டு வந்தனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை, 11,000 ரூபாய் முதல், 17,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று, 16,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட, 6,000 ரூபாய் விலை கூடுதலாக விற்பனையானது. மொத்தம், 4.60 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரூ.14,400 மதிப்புள்ள

மதுபாட்டில்கள் பறிமுதல்

அரூர் அடுத்த தீர்த்தமலை டாஸ்மாக் கடை முன், நேற்று மாலை, 4:00 மணிக்கு கோட்டப்பட்டி எஸ்.எஸ்.ஐ., அருள்ராஜ் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்கு மதுபாட்டில்களை எடுத்துச்சென்ற கீழானுாரை சேர்ந்த சுந்தர்ராஜ், 55; வேப்பம்பட்டி சுபாஷ், 29; ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 14,400 ரூபாய் மதிப்புள்ள, 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அரசு பஸ் மோதி பெண் சாவுதர்மபுரி மாவட்டம், சோளபாடியை சேர்ந்த சின்னம்மா, 56; இவர், நேற்று முன்தினம் வீட்டிற்கு செல்வதற்காக, மல்லாபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, சாலையை கடந்த போது, பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். விபத்து குறித்து, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மது பதுக்கியவர் கைதுமாரண்டஹள்ளி அடுத்த மல்லாபுரம் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாரண்டஹள்ளி எஸ்.ஐ., பச்சியப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அ.மல்லாபுரம் பகுதியில் இளங்கோ, 54 என்பவர் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த, 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

9 மாத சிசு திடீர் உயிரிழப்புகிருஷ்ணகிரி மாவட்டம், வரஹானபள்ளியை சேர்ந்த சிவக்குமார் மஞ்சுளா தம்பதிக்கு, 9 மாதத்தில் சசிதரன் என்ற ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மேல்ஈசல்பட்டியிலுள்ள தாய் வீட்டிற்கு கடந்த, 5 நாட்களுக்கு முன் மஞ்சுளா வந்துள்ளார். குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிப்பால், தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில், 2 நாட்கள் சேர்த்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, குழந்தை இறந்தது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர்கள் மோதி விபத்துடீக்கடைக்காரர் மனைவி பலி

பொம்மிடி வடசந்தையூரை சேர்ந்தவர் சுபேதார், 59; டீ, பன் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்; இவர் மனைவி பானு, 45; இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, பொம்மிடி மருத்துவமனைக்கு செல்ல, தன் டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில், பானுவை உட்கார வைத்து கொண்டு பாப்பிரெட்டிப்பட்டி -- பொம்மிடி ரோட்டில் சென்றார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ஹீரோ ஹோண்டா பேஷன் பைக் மோதியதில் சுபேதார், பானு ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். பானுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, சேலத்திலுள்ள தனியார் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை, பாப்பிரெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடத்தின. முகாமை பேரூராட்சி தலைவர் மாரி தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் பரிசோதனை, கண்களில் நீர் அழுத்த பரிசோதனை, கிட்டபார்வை, துாரப்பார்வை பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், பேரூராட்சி பகுதி பொதுமக்கள் பயன்பெற்றனர். இதில், பேரூராட்சி துணைத்தலைவர் ரவி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளி இளம்பெண்

பலாத்கார முயற்சி; வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஜம்மனப்பட்டியை சேர்ந்த ரஜினி என்பவர், புது ஜீவா நகரில் ஒரு வீட்டின் குடும்ப நிகழ்ச்சிக்காக பந்தல், ரேடியோ, சீரியல் செட் அமைத்திருந்தார்.

இவர் மகன் கவினேஷ், 20, தந்தைக்கு உதவியாக அங்கிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் அங்கு நின்றிருந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக, துாக்கிச்சென்று பாலியல் பலாத்கார செய்ய முயற்சித்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பெண்ணின் தந்தை மகளை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், கவினேஷை கைது செய்தனர்.

பி.எஸ்.என்.எல்., எம்ளாயீஸ் யூனியன்

வேலைநிறுத்த போராட்ட கருத்தரங்கம்

பி.எஸ்.என்.எல்., எம்ளாயீஸ் யூனியன் சார்பில் பிப்-.,16 அன்று நடக்கவுள்ள, அகில இந்திய வேலைநிறுத்த போராட்ட விளக்க கருத்தரங்கம், நேற்று முன்தினம் தர்மபுரியில் நடந்தது.

இதில், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கோபாலன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

பி.எஸ்.என்.எல்., எம்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார்.

இதில், பி.எஸ்.என்.எல்., சேவையை மேம்படுத்த, 4- ஜி சேவை வழங்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியில் உள்ளவர்களுக்கு, 3-வது சம்பள மாற்றம், ஓய்வுபெற்றவர்களுக்கு பென்சன் மாற்றம், 2017 ஜன., 1 முதல் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்-., 16 ல் நடக்கவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை, தர்மபுரி மாவட்டத்தில் வெற்றியடைய செய்ய, கூட்டத்தில் முடிவு செய்தனர்.

புதிய மாரியம்மன் கோவில்

கட்ட கிராம மக்கள் பூஜை

கடத்துார் ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கசியம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு புதியதாக மாரியம்மன் கோவில் கட்ட, கிராம மக்கள் முயற்சி எடுத்தனர். இதையடுத்து ஊர்மக்கள் சேர்ந்து தற்போது, 20 லட்சம் ரூபாய் அவர்களுக்குள் வசூல் செய்துள்ளனர். தொடர்ந்து மக்கள் ஆதரவோடு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக மாரியம்மன் கோவில் கட்ட முடிவு செய்து, அதன்படி நிர்வாகிகள் வேணுகோபால், மணிவண்ணன், பூசாரிகள் கோவிந்தசாமி, கமலநாதன், சிகாமணி, சின்னராஜ், முனிராஜ், சிவக்குமார் உள்ளிட்டோர், நேற்று காலை புதிய கோவில் கட்ட பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். இக்கோவில், ஓராண்டுக்குள் கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முருகர் கோவில் கும்பாபிஷேகம்

அரூர் அடுத்த ஈட்டியம்பட்டியிலுள்ள வள்ளி தேவசேனா வெற்றிவேல் முருகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 5ல் காலை, 9:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு மாரியம்மன் கோவிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், விநாயகர் வழிபாடு, சுவாமிக்கு அஷ்டபந்தனம், சுவாமி நிலை நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு வேதபாராயணம், 2ம் கால யாகவேள்வி, சூர்யபூஜை, சிலைகளுக்கு காப்பு கட்டுதல், கடம்புறப்பாடு தொடர்ந்து, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு முருகர் மற்றும் வள்ளி தெய்வானை சீர் எடுத்தல், 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

இரு மாணவியர் உட்பட 3 பெண்கள் மாயம்

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 9ல் பள்ளிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், இண்டூர் அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 24; பட்டதாரி. நேற்று முன்தினம் வெளியே

சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். அ‍தேபோல் பென்னாகரத்தை சேர்ந்த கூழ் வியாபாரியின், 18 வயது மகள் அரசு கல்லுாரியில் முதாலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. ஏ.பாப்பாரப்பட்டியை சேர்ந்த முனிராஜ் என்பவருடன் சென்றிருக்கலாம் என, அவரது தந்தை புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

எருது விடும் விழாவில் 20 பேர் காயம்

பாலக்கோடு அருகே சீரியம்பட்டியில், எருது விடும் விழா நடந்தது. போதிய பாதுகாப்பு இல்லாததால், தறிக்கெட்டு ஓடிய காளைகள் முட்டியதில், 20 பேர் காயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சீரியம்பட்டியில் எருதுவிடும் விழா நேற்று நடந்தது. இதில், சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், மாரண்டஹள்ளி, கரகூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக, ஊர் வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீரை, காளைகளின் மேல் தெளித்து, முதலில், ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டு, அதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன.

சீறி பாய்ந்த காளைகளை, இளைஞர் போட்டி போட்டு அடக்க முயன்றனர். திடீரென காளைகள், பார்வையாளர்கள் பக்கம் ஓடியது. இதில், காளைகள் முட்டியதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிசிச்சைக்காக, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us