/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில் ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி; பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
/
ரயில் ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி; பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
ரயில் ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி; பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
ரயில் ஓட்டுநர்களுக்கு கூடுதல் பணி; பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 05, 2025 04:52 AM

மதுரை:மதுரைக் கோட்டத்தில் ரயில் ஓட்டுநர்களின் 9 மணி நேர பணி நேரத்தையும் கடந்து பணி செய்ய அதிகாரிகள் நிர்பந்திப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
நேற்று முன்தினம் சரக்கு ரயில் ஓட்டுநர்கள் ஜிஷ்ணு மோகன், ரமேஷ் ஆகியோர் காலை 8:00 மணிக்கு பணிக்கு வந்தனர். மதுரையில் இருந்து கூடல்நகர் சென்று, அங்கிருந்து வாடிப்பட்டி - சோழவந்தான் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்கான சரக்கு ரயிலை இயக்கிய பின் மாலை 5:15 மணிக்கு கூடல்நகர் வந்தனர்.
அன்றைய பணியை முடித்து விடைபெற இருந்த நிலையில், திண்டுக்கல் செல்லுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 9 மணி நேரத்திற்கும் மேல் பணி செய்த காரணத்தால், திண்டுக்கல்லிற்கு பதில் மதுரைக்கு அழைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவசரகால அடிப்படையில் திண்டுக்கல்லில் வேலை செய்தாக வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டது.
இயந்திர கோளாறு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் அவசரகால அடிப்படையில் வேலை வாங்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு. ஆனால் மதுரைக் கோட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக, காலி பணியிடங்கள் நிரப்பாமல் அனைத்து ரயில்களுக்கும் அவசரகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும் என்றும், சரக்கு ரயில் ஓட்டுநர்களை கட்டாயம் 12 மணி நேரம் வரை வேலை வாங்கும் போக்கும் நிலவுகிறது.
கடந்த வாரம் எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர்கள் சார்பில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேலை நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என போராட்டம் நடத்திபேச்சுவார்த்தை மூலம் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை மீறி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் வேலை வாங்க முற்பட்டதால் அவர்கள் மறுத்தனர்.
இதையடுத்து மும்பை எல்.டி.டி - மதுரை ரயிலில் (22101) கூடல்நகரில் இருந்து மதுரை வரவழைக்கப்பட்டனர்.
அங்கு 'க்ரூ புக்கிங்' அலுவலகத்தில் மாலை 6:50 மணிக்கு பணி முடித்துச் சென்றனர்.
இரவு 8:50 மணிக்கு கொடுத்த பணியை செய்ய மறுத்ததை காரணம் காட்டி இரு ஓட்டுநர்களையும் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையறிந்த மற்ற ரயில் ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் திரண்டனர். நிர்வாகம் பேச மறுத்ததால் மருத்துவ விடுப்பில் செல்ல முடிவெடுத்து விடுப்பு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைமுறையில், மருத்துவ விடுப்பு செல்ல விரும்பும் ஓட்டுநர்கள் க்ரூ கன்ட்ரோலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் ரயில்வே டாக்டரை சந்திப்பதற்கான 'மெமோ' வழங்குவார்.
அதனை பெற்று மருத்துவமனைக்கு சென்றதும் டாக்டர்கள் பரிசோதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கலாமா அல்லது மருந்து கொடுத்து ரயில்களை இயக்கச் சொல்லலாமா என முடிவெடுப்பர். ஆனால் இரவு 11:15 மணிக்கு மருத்துவ விடுப்பு கேட்ட ஓட்டுநர்களுக்கு அதற்கான 'மெமோ' தராமல் இழுத்தடித்தனர்.
ஓட்டுநர் இல்லாமல் நின்ற ரயில்
இதனால் அதிகாலை12:30 மணிக்கு மதுரை வந்த கோவை - நாகர்கோவில் ரயில் (22668) ஓட்டுநர் இன்றி மதுரையிலேயே நீண்ட நேரம் காத்திருந்தது. இதனால் நள்ளிரவில் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இத்தகவல் சென்னை தலைமையகம் வரை சென்றதால் உயரதிகாரிகள் உத்தரவு படி, மூத்த கோட்ட மின் பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தி சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து ஓட்டுநர்கள் பணிக்குச் சென்றனர். இதனால்ரயில் (22668),அதிகாலை 1:40 மணிக்கு தாமதமாக புறப்பட்டுச் சென்றது. ரயில் தாமதத்திற்கு அந்த அதிகாரியின் மெத்தனப் போக்கே காரணம் என ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
மதுரைக் கோட்டத்தில் 125 ரயில் ஓட்டுநர் பணியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளன. ஆனால் 28 பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
ரயில்வே வாரியமே ஓட்டுநர்கள் 9 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 3 மாதங்களுக்கு ஒருமுறை 9 மணி நேரம் தாண்டி பணி ஒதுக்குவது குறித்து கோட்ட அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் காலியிடங்களை சமாளிக்க தொடர்ந்து 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.
16 மணி நேர ஓய்வையும் எடுக்க விடாமல் 12 மணி நேரத்திலேயே அடுத்த பணியில் நியமிக்கின்றனர். இதனால் போதிய ஓய்வின்றி மன உளைச்சலில் ஓட்டுநர்கள் பணிபுரிவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் எனில் நிர்ணயிக்கப்பட்ட பணிநேரத்திற்கு பின் பணிபுரிய ஓட்டுநர்களே சம்மதம் தெரிவித்தாலும் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.