/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற உத்தரவு போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் கைது
/
நீதிமன்ற உத்தரவு போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் கைது
நீதிமன்ற உத்தரவு போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் கைது
நீதிமன்ற உத்தரவு போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் கைது
ADDED : ஜன 14, 2024 04:31 AM

கடலுார் : அஞ்சல் நிலைய கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காகநீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சையது கலீல் மகன் கமல்பாபு 22. இவரது அஞ்சல் சேமிப்பு கணக்கை 2021 ஜூலை 3ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
அந்த கணக்கை மீண்டும் பயன்படுத்துவதற்காக கடலுார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதாக அஞ்சலக கண்காணிப்பாளருக்கு 2024 ஜன. 3ல் தபால் வந்தது.
அந்த கடிதத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்தபோது போலி என்பது தெரிய வந்தது.
அதையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கடலுார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அலுவலக சிரஸ்தார் முரளிதரன் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி. ராஜாராம் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிந்து விசாரணை செய்தார்.
தகவலின்படி பண்ருட்டியை சேர்ந்த கமல்பாபுவை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அதில் முடக்கப்பட்ட அவரது அஞ்சலகசேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக ஆன்லைன் மூலம் கோர்ட் உத்தரவை எடுத்து அதுபோலவே தன் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் மூலமாக போலி உத்தரவை தயார் செய்துஉள்ளார்.
அதில் 'ஸ்டாம்ப் மேக்கர்' என்ற இணையதளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் பெற்று போலி உத்தரவை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் அஞ்சலக கண்காணிப்பாளருக்கும் விழுப்புரத்தில் இருந்து பதிவு தபாலில் அனுப்பியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கமல்பாபுவை கைது செய்த போலீசார் போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்தி கம்ப்யூட்டர் சி.பி.யூ. போலி முத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கமல்பாபுவை நேற்று கடலுார் சி.ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

