/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விலை உயர்வு இருந்தும் மழையால் வெல்லம் தயாரிப்பில் சிரமம் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையால் தேவை அதிகரிப்பு
/
விலை உயர்வு இருந்தும் மழையால் வெல்லம் தயாரிப்பில் சிரமம் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையால் தேவை அதிகரிப்பு
விலை உயர்வு இருந்தும் மழையால் வெல்லம் தயாரிப்பில் சிரமம் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையால் தேவை அதிகரிப்பு
விலை உயர்வு இருந்தும் மழையால் வெல்லம் தயாரிப்பில் சிரமம் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையால் தேவை அதிகரிப்பு
ADDED : ஜன 14, 2024 03:53 AM

போடி : தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் உருண்டை வெல்லத்திற்கு நல்ல விலை இருந்தும் மழையால் தயாரிக்க முடியாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் போடி, பெரியகுளம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் மலை அடிவார பகுதியாக இருப்பதால் ஆண்டு முழுவதும் கரும்பு சாகுபடியாகிறது. கரும்பு பயிரிட்ட 10 வது மாதத்தில் அறுவடை செய்யப்படும். கரும்புக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் எப்போதும் கரும்பு பயிரிடவே ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைந்த கரும்பினை பல விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். சிலர் கரும்பு சாறு பிழிந்து கொப்பரையில் காய்ச்சி உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். வெல்லம் தயாரிப்பில் பலருக்கு வேலை வாய்ப்பும், நல்ல விளையும், விற்றவுடன் தாமதம் இன்றி கிடைப்பதால் லாபகரமான தொழிலாக இன்றும் உள்ளது.
மழையால் வெல்லம் தயாரிப்பதில் சுணக்கம்
மாவட்டத்தில் உற்பத்தியாகும் உருண்டை வெல்லத்திற்கு கேரளா பகுதியில் எப்போதும் 'மவுசு' அதிகம். சபரிமலை சீசன், தைப்பொங்கல் காலங்களில் வெல்லத்திற்கு கடும் கிராக்கி இருக்கும். 4 ஆண்டுகளுக்கு முன்பு 42 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 2200 முதல் 2300 வரை விற்பனையானது. கடந்த ஆண்டு துவக்கத்தில் சிப்பம் ரூ.1800 விலையில் இருந்தது. அதன்பின் ரூ.1650 ஆக குறைந்தது. கடந்த மாதம் சிப்பம் ரூ.1700 முதல் 1800 ஆக உயர்ந்தது. தற்போது சீசன் துவங்கிய நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உருண்டை வெல்லம் தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தி குறைவால் சிப்பத்திற்கு ரூ.200 வரை விலை உயர்ந்து ரூ.2 ஆயிரமாக உள்ளது. நல்ல விலை இருந்தும் தொடர் மழையால் கொப்பறையில் வெல்லம் தயாரிக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
உரம், கூலி உயர்வு
ரவிச்சந்திரன், விவசாயி, போடி : மாவட்டத்தில் உற்பத்தியாகும் உருண்டை வெல்லத்திற்கு எப்போதுமே கிராக்கி இருக்கும். நல்ல தண்ணீர், சீதோஷ்ண நிலை பயிர் வளர்ச்சியால் வெல்லத்தின் சுவை அதிகம். இதனால் கேரளா வியாபாரிகள் விரும்பி வாங்குவார்கள். சிப்பம் ரூ.2000 ஆக விலை உள்ளது. நாளுக்கு நாள் உரம் விலை, தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்து வருவதால் உருண்டை வெல்லத்திற்கு ரூ.2000க்கு மேல் விலை இருந்தால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். விலை குறைந்து இருந்ததால் கட்டுபடி ஆகாத நிலையில் விவசாயிகள் பலர் மாற்று சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.
உரம் விலையை குறைக்கவும், உருண்டை வெல்லத்திற்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

