/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வண்டியூர் கண்மாயில் மேம்பால பணியை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு ஜன.22 நீதிபதி எம்.தண்டபாணி நேரில் ஆய்வு
/
வண்டியூர் கண்மாயில் மேம்பால பணியை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு ஜன.22 நீதிபதி எம்.தண்டபாணி நேரில் ஆய்வு
வண்டியூர் கண்மாயில் மேம்பால பணியை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு ஜன.22 நீதிபதி எம்.தண்டபாணி நேரில் ஆய்வு
வண்டியூர் கண்மாயில் மேம்பால பணியை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு ஜன.22 நீதிபதி எம்.தண்டபாணி நேரில் ஆய்வு
ADDED : ஜன 19, 2024 05:13 AM
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயில் மேம்பால பணி, தென்கால் கண்மாயில் சாலைப் பணியை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அங்கு ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து கோமதிபுரம் வரை 2.1 கி. மீ., துாரம் ரூ.150.28 கோடியில்மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை துவங்கியது.இதற்காக வண்டியூர் கண்மாயை சேதப்படுத்தியுள்ளனர்.
கண்மாயில் தண்ணீர் தேக்க இயலாத நிலை ஏற்படும். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கும், வண்டியூர் கண்மாயில் மேம்பாலம் கட்டுமான பணிக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மதுரை 50 ஆண்டுகளில் பல நீர் நிலைகளை இழந்துள்ளது. இரு கண்மாயிலும் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.
நீதிபதி பி.புகழேந்தி: மதுரை- திருமங்கலம் இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தென்கால் கண்மாய்க்கரை வழியாக புதிய இருவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெறப்பட்டுஉள்ளது.
வண்டியூர் கண்மாயில்தடுப்புச் சுவர்களை உயர்த்தி, தடுப்பணையை பலப்படுத்துகிறோம். கண்மாயில் நீரை சேமிப்பது பாதிக்கப்படாது என அரசு தரப்பு தெரிவித்தது. இடைக்கால தடை உத்தரவு வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு உத்தரவிட்டனர்.
இருவரும் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்ததால் தகுந்த உத்தரவிற்காக தலைமை நீதிபதி முன் ஆவணங்களை பதிவுத்துறை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு: கோரிப்பாளையம் தேவர் சிலை முதல் கோமதிபுரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆவின் முதல் கோமதிபுரம் சந்திப்பு, வண்டியூர்கண்மாய் வரை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சர்வீஸ் ரோடு அமைக்கப்படும்.
கண்மாயை நம்பியிருந்த ஆயக்கட்டு விவசாயம் சுருங்கிவிட்டது. தென்கால் கண்மாய் கரையை பலப்படுத்தி இருவழிப் பாதை அமைக்கப்படுகிறது.
நீதிபதி: வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப ரோடுகளை விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பெயர் நீடித்த நிலையான வளர்ச்சி இல்லை. வீக்கம். இதே நிலை நீடித்தால் உணவுக்கு என்னசெய்வது.பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது. இதில் அரசு கொள்கை முடிவு எடுப்பதில்லை.
கனமழை பெய்தால் வடிந்து செல்ல போதிய வடிகால்கள் இல்லை. கண்மாய்களில் ஒரு அடியை கூட எடுக்க அனுமதிக்க முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: ஜன.,22 மாலை 5:00 மணிக்கு இரு கண்மாய்களிலும் ஆய்வு செய்வேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்களை அழைத்துச் செல்வேன். விசாரணை ஜன.,23க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இரு கண்மாய்களிலும்மேற்கொண்டுள்ள பணியை நிறுத்தி வைக்க வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இந்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும். இவ்வாறு உத்தரவிட்டார்.

