/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகள்
/
அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகள்
ADDED : பிப் 24, 2024 05:08 AM
மதுரை : புதிதாக அறிமுகமாகும் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் 1275 ஸ்டேஷன்கள் நவீனமயமாக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிப்.,26ல் பிரதமர் மோடி, இந்திய அளவில் 550 ரயில்வே ஸ்டேஷன்களை 'அம்ரித் ஸ்டேஷன்'களாக தரம் உயர்த்தவும், 1500 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் 44 ரயில்வே ஸ்டேஷன்கள் 193 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் தெற்கு ரயில்வேயில் அமைகிறது. தமிழக ரயில்வே கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியாக, உலகத்தரம் வாய்ந்த, அழகிய முகப்புடன் ஸ்டேஷன்கள், பயணிகளுக்கு நவீன வசதிகள் என ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
அன்றைய நாளில் தமிழகத்தில் 32 ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரூ.803.78 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும் ரூ.476.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 மேம்பாலங்கள், 106 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட உள்ளன. மேலும் ரூ.1295.16 கோடியில் 30 மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த 140 பாலங்களும் லெவல் கிராசிங்குகளுக்கு மாற்றாக அமையும். இதன் மூலம் ரோடுகளை பயன்படுத்துவோர் பாதுகாப்பாகவும், லெவல் கிராசிங்கில் நீண்ட நேரம் காத்திராமலும் பயணிக்க முடியும்.
தெற்கு ரயில்வேயில் சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்துார், மாம்பலம், சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுண்ட், ஈரோடு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், திருப்பத்துார், சின்னசேலம், நாமக்கல், கோவை வடக்கு, திருவண்ணாமலை, திருவாரூர், விருத்தாசலம், கும்பகோணம் தரம் உயர்த்தப்பட உள்ளன.
மேலும் பழநி (ரூ.13.88 கோடி), திருச்செந்துார் (17.50 கோடி), அம்பாசமுத்திரம் (10.81 கோடி), காரைக்குடி (13.91 கோடி), கோவில்பட்டி (12.72 கோடி), மணப்பாறை (10.11 கோடி), புதுக்கோட்டை (14.48 கோடி), ராமநாதபுரம் (11.95 கோடி), ராஜபாளையம் (11.70 கோடி), பரமக்குடி (10.56 கோடி), திண்டுக்கல் (22.85 கோடி), துாத்துக்குடி (12.37 கோடி), திருநெல்வேலி (270 கோடி), பொள்ளாச்சி அம்ரித் ரயில்வே ஸ்டேஷன்களாக தரம் உயர்த்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

