/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நேர்மை இல்லையெனில் வளர்ச்சி நிலைத்து நிற்காது எழுத்தாளர் வரலொட்டி ெரங்கசாமி அட்வைஸ்
/
நேர்மை இல்லையெனில் வளர்ச்சி நிலைத்து நிற்காது எழுத்தாளர் வரலொட்டி ெரங்கசாமி அட்வைஸ்
நேர்மை இல்லையெனில் வளர்ச்சி நிலைத்து நிற்காது எழுத்தாளர் வரலொட்டி ெரங்கசாமி அட்வைஸ்
நேர்மை இல்லையெனில் வளர்ச்சி நிலைத்து நிற்காது எழுத்தாளர் வரலொட்டி ெரங்கசாமி அட்வைஸ்
ADDED : ஜூன் 24, 2025 06:58 AM

மதுரை: ''வாழ்வில் நேர்மை இல்லையெனில் எந்த வளர்ச்சியும் நிலைத்து நிற்காது'' என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர் வரலொட்டி ெரங்கசாமி அறிவுரை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
வாழ்வின் எந்நிலையில் இருந்தாலும், 'பெரிதினும் பெரிது கேள்' எனும் பாரதியின் கூற்றுக்கிணங்க பெரிதாக கனவு காணுங்கள். அத்தகைய கனவுகளோடு ஒட்டிய வாழ்க்கை முறை இருக்க வேண்டும்.
எல்லோரிடமும் கனவு உள்ளது. ஆனால் நிறைவேறுவதில்லை. மற்றவர்களுக்கு தீங்கில்லாத வகையில், தீவிரமாக இருக்கும் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்.
திறமையை விட தெரிவு முக்கியம். கனவு காண்பவர்கள் அதற்கான பாதையை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவு, ஆற்றல், திறமை ஆகியவற்றை விட நாம் தேர்ந்தெடுக்கும் வழிகளே உயர்வு தரும்.
படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம் எனக் கேட்கின்றனர்.
என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் உள்ளனர். எந்த வேலை செய்தாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும். பிடித்தக் கல்லுாரியில், பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அதில் சில பாடங்கள் பிடிக்காதவையாக இருக்கும்.
அவற்றை விருப்பத்துடன் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தான் வாழ்வின் ரகசியம் ஒளிந்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் இருக்கும். புகழுடன் இருப்பது வெற்றியல்ல. செய்யும் வேலையில் மகிழ்ச்சி, நிம்மதி, மனநிறைவு இருந்தால் அதுவே வெற்றி. புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் அவை கிடைப்பதில்லை.
மாணவர்களுக்கு நேர மேலாண்மை அவசியம். தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு எத்தனை மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பதை பொறுத்து பதில் அளிக்க வேண்டும்.
வாழ்வில் எது தேவையோ அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு செயலால் நமக்கு என்ன பயன் என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும்.
என்னதான் கனவு, அறிவு, நேர மேலாண்மை உள்ளிட்டவை இருந்தாலும் நேர்மை இல்லையெனில் எந்த வளர்ச்சியும் நிலைத்து நிற்காது. நேர்மை, முதலில் கடினமாக தோன்றினாலும் வாழ்வின் பிற்காலத்தில் நிம்மதியை தரும்.
இவ்வாறு பேசினார்.
எழுத்தாளர் வரலொட்டி ெரங்கசாமி, பெற்றோர் சந்தானலட்சுமி, உமா மகேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
கல்லுாரி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, புத்தாக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.