/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 19, 2024 11:43 AM
ரூ. 3.23 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுாரில், 3.23 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 7,304 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். மொத்தம், ஐந்து லட்சத்து 67 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 4,255 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் முதல் தரமான தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ, 89.19 ரூபாய், குறைந்தபட்சமாக, 73.29 ரூபாய், சராசரியாக, 83.33 ரூபாய்-க்கு ஏலம் போனது. இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ, 70, குறைந்தபட்சமாக, 54.19, சராசரியாக, 66.39- ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், மூன்று லட்சத்து, 23 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
'ஆடுகளை கடித்த வெறி நாய்களை
பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'
''சமயசங்கிலி பகுதியில், ஆடுகளை கடித்த வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பஞ்., தலைவர் முருகேசன் தெரிவித்தார்.
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் நேற்று முன்தினம் தீவனத்தை மேய்ந்து கொண்டிந்த ஆடுகளை, மூன்று வெறிநாய்கள் கடித்ததில், 7 ஆடுகள் இறந்தன. பல ஆடுகள் காயமடைந்துள்ளது. காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலானவர்கள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெறிநாய்கள் உலா வருவதால், மேயச்சலுக்கு ஆடுகளை விடுவதற்கு அச்சமடைகின்றனர். பட்டி போட்டு வளர்க்கும் ஆடுகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமயங்கிலி பஞ்., தலைவர் முருகேசன் கூறுகையில்,''சமயசங்கிலி காட்டுப்பகுதி, ஆற்றுப்பகுதிகளில் ஏராளமான வெறிநாய்கள் உலா வருகின்றன. இரண்டு நாளில் வெறிநாய்களை பிடித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
புகையிலை பொருட்கள்
விற்ற முதியவர் கைது
குமாரபாளையத்தில், புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., சந்தியா மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி, 70, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் வாகன சட்டத்தை
ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரி, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். பத்து ரூபாய் இயக்க பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வ ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இதில், ஓட்டுனர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் பதிய சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
மோட்டார் வாகன ஊழியர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தப்படும் வாகன உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். போக்கு வரத்து அலுவலர்கள் லஞ்சம் என்ற பெயரில் வாகன ஓட்டுனர்களை நசுக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 500க்கும் மேற்பட்ட தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்.
ரூ.1.25 லட்சத்திற்கு
பருத்தி ஏலம்
மல்லசமுத்திரத்தில், ரூ.1.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 60 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் பி.டி., ரகம் குவிண்டாலுக்கு, 6,080 முதல், 7,280 ரூபாய் வரையிலும், கொட்டு பருத்தி, 3,900 முதல், 5,100 ரூபாய் வரையிலும் என மொத்தம், 1.25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், 24ம் தேதி நடைபெறும் என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
பட்டணத்தில் பொங்கல் விழா
ஆர்வத்துடன் பெண்கள் பங்கேற்பு
ராசிபுரம் அடுத்த பட்டணத்தில் நடந்த பொங்கல் விழாவில், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பட்டணம் பார்க்கவன் கைப்பந்து குழு சார்பில், 43ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா, 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. இறுதி நாளான நேற்று முன்தினம் பல்வேறு போட்டிகள், பரிசளிப்பு விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு பெண்களுக்கான கோலப்போட்டி, சைக்கிளில் மெதுவாக செல்லுதல், ஆண்களுக்கான கைபந்து போட்டி, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி மற்றும் ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணிக்கம், கண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பரிசு வழங்கினர். முன்னதாக பட்டணம் துணைத்தலைவர் பொன். நல்லதம்பி வரவேற்றார்.
லயன்ஸ் சங்கம் சார்பில்
வழுக்கு மரம் ஏறும் போட்டி
ப.வேலுார் லயன்ஸ் சங்கம் சார்பில், வழுக்கு மரம் ஏறும் போட்டி நேற்று அதிகாலை, 4:00 மணி வரை நடந்தது
ப.வேலுார் லயன்ஸ் சங்கம் சார்பில், 26ம் ஆண்டு பொங்கல் விழா போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கோலப்போட்டி, பானை உடைத்தல், வழுக்குமரம் ஏறும் போட்டிகள் நடந்தன. ப.வேலுார்
டி.எஸ்.பி., ராஜமுரளி, வழுக்கு மரம் ஏறும் போட்டியை துவக்கி வைத்தார்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொடங்கிய வழுக்கு மரம் ஏறும் போட்டி விடிய, விடிய நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். மொத்தம், 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதியாக நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோப்பணம்பாளையம் வீரப்பன் நினைவு குழுவை சேர்ந்த, ஏழு இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், சண்முகம், கண்ணன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கத் தலைவர் விஜய கண்ணன் செய்திருந்தார்.
முத்துக்காப்பட்டியில் கோ பூஜை
நாமக்கல்---சேந்தமங்கலம் சாலையில் உள்ள முத்துக்காப்பட்டியில், கொங்குதேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கோபூஜை மற்றும் ஆத்மார்த்த சிவ பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், நாட்டு பசு மாடுகளுக்கு கோமாதா பூஜை, விநாயகர் பூஜை, சிற்றம்பலவானவருக்கு அபிஷேகம் மற்றும் ஆத்மார்த்த சிவ பூஜை நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று கோ பூஜை செய்தனர்.
பா.ஜ., நிர்வாகி நியமனம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய தலைவராக செயல்பட்டு வந்த பிரகாஷ் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய தலைவராக சுரேஷ் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தொழிற் பயிற்சி முகாம்
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் படைவீரர்களின் மறு வேலைவாய்ப்பிற்காக, 10 ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் முடி ஒப்பனையாளர், உணவக உரிமையாளர், பொதுப்பணி உதவியாளர், மாதிரி ஒருங்கிணைப்பாளர், உதவி வடிவமைப்பாளர், இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுனர் நிலை--3, வணிக மோட்டார் வாகன ஓட்டுனர் நிலை--4. முன்னணி மாதிரி தயாரிப்பாளர், தையல் இயந்திரம் இயக்குபவர், இணையம் தொடர்பாக இளநிலை தொழில் நுட்பவியலாளர், இளநிலை புரோகிராமர், சி.என்.சி., லேத், தானியங்கி மின் பாராமரிப்பு இளநிலை தொழில் நுட்பவியலாளர், இளநிலை ரோபோ இயக்குபவர் மற்றும் புரோகிராமர் - ஆர்க் வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு விதமான தொழில் பயிற்சி வகுப்புகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
இந்த பயிற்சிகளில் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண் 04286-233079 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 26ல் கிராம சபை கூட்டம்
ஜனவரி, 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்திலுள்ள, 322 கிராம ஊராட்சிகளிலும் வரும், 26 குடியரசு தினத்தன்று காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம், 2024--25ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கலாம். பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில்
வேலை வாய்ப்பு
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய விமான நிலைய ஆணையத்தால், நடத்தப்பட உள்ள வேலைவாய்ப்பு தேர்வில் கலந்து கொள்ள www.aai.aero என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஜன., 26ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இளநிலை உதவியாளர், (தீயணைப்பு சேவை), இளநிலை உதவியாளர் (அலுவலர்), சீனியர் உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்), சீனியர் உதவியாளர் (கணக்கு) உள்ளிட்ட, 119 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடக்கவுள்ளது.
தேர்விற்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு பற்றிய விவரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தில் கேரியர்ஸ் என்ற உட்
பிரிவில் உள் நுழைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண், 04286-222260 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டடங்கள் திறப்பு
மல்லசமுத்திரம் ஒன்றியத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிப்பிட கட்டடம், தண்ணீர் தொட்டியை எம்.எல்.ஏ., - எம்.பி., திறந்து வைத்தனர்.
மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட, மாமுண்டி கிராமத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள, மகளிருக்கான நவீன கழிப்பிடத்தையும், மாமுண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதார வசதியுடன், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பிடத்தையும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திறந்து வைத்தார். அதேபோல் சப்பையாபுரம் கிராமம், கரட்டுபாளையத்தில், 30 லட்சம் லிட்டர் கொள்ளளவில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நாமக்கல்
எம்.பி., சின்ராஜ் திறந்து வைத்தார்.
கொ.ம.தே.க., நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரஞ்சித், தி.மு.க., மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல், தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாமுண்டி கணேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
தலைமறைவு
குற்றவாளி கைது
பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த ராக்கியாவலசு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த, 4ல், மொளசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு காட்டுப்பகுதியில் மூவர் சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தனர். இது தொடர்பாக கார்த்திகேயன், 43, செந்தில், 46, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மயில்சாமி, 32, என்பவரை மொளசி போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாமக்கல்லில் இருந்து
பழநிக்கு பாதயாத்திரை
நாமக்கல்லில் இருந்து, பழநி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள ரெட்டிப்பட்டி அடுத்த கூலிப்பட்டி, கந்தபுரி முருகன் கோவிலில் இருந்து, அனைத்து இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்க பழநி பாதயாத்திரை குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் பழநிக்கு பாதியாத்திரை செல்வர். அந்த வகையில் நான்காம் ஆண்டாக மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள், நேற்று பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
ஆண் பக்தர்கள், 70 பேரும், பெண் பக்தர்கள், 55 பேரும் பச்சை ஆடை உடுத்தி, காவடி எடுத்து சென்றனர். அவர்களை ஆன்மிகவாதிகள் வழியனுப்பி வைத்தனர்.
இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜனவரி மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று, (19ம் தேதி) காக்காவேரியில் உள்ள முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் ஜாவா, டேலி முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும் முகாமில் பயன்பெறலாம்.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும், இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். முகாம் மூலம் பணிவாய்ப்பு பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை, 9:00 முதல் 3:00 மணி வரை நடக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
கேட்டு கலெக்டரிடம் மனு
சேந்தமங்கலம் தாலுகா, கரியபெருமாள்புதுாரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம், விழா குழுவினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கும் அரசாணையில் உள்ள ஊர்களின் பெயர் பட்டியலில் சேந்தமங்கலம் தாலுகா, போடிநாயக்கன்பட்டி அடுத்த சிவநாயக்கன்பட்டி கிராமம் கரியபெருமாள்புதுாரும் இடம் பெற்றுள்ளது.
ஆகையால் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது பிப்., 9ம் தேதி அன்று எங்கள் ஊரில் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அரசு
ஊழியர் மர்ம சாவு
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 60, முன்னாள் மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பிரபாவதி, 51, மேட்டூர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வந்துள்ளார். நேற்று காலை, 8:00 மணியளவில் பிரபாவதியின் அக்கா தேவி போன் செய்து, குமாரபாளையம் பாரதி நகர் பகுதியில் உள்ள செல்வி என்பவர் வீட்டில், ரவிச்சந்திரன் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
உடனே பிரபாவதி, உறவினர்களுடன் நேரில் சென்று பார்த்த போது, ரவிச்சந்திரன் இறந்திருந்தது தெரியவந்தது. கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

