/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 24, 2024 11:12 AM
சாலை பாதுகாப்பு வார விழா
துண்டு பிரசுரம் வினியோகம்
தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில், வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர், பயணிகளுக்கு, சாலை பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. எஸ்.ஐ., பாலமுருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உமா ஆகியோர் துவக்கி வைத்தனர். அதை தொடர்ந்து, அய்யர்மேடு, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் டூவீலர், லாரி டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மோகனுார் அரசு மாதிரி மகளிர்பள்ளியில் 'தமிழ்க்கூடல்' விழா
மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், செங்காந்தள் தமிழாய்வு மன்றம் மற்றும் செங்காந்தள் வாசகர் வட்டம் சார்பில், 'தமிழ்க்கூடல் விழா' நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சுடரொளி தலைமை வகித்தார். மாணவி துர்கா வரவேற்றார். எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் செந்தில்குமார், 'சிந்திக்கப்பழகு' என்ற தலைப்பிலும், கவிஞர் வெற்றிச்செல்வன், 'உன்னால் முடியும்' என்ற தலைப்பிலும் பேசினர்.
'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியை முன்னிட்டு, பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர்கள் பார்வதி, தனலட்சுமி, வீரராகவன், பாண்டியராஜன், தீபா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
தேசிய வேளாண் சந்தையில்ரூ.46,000க்கு தேங்காய் ஏலம்
ப.வேலுாரில், மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. அதில், 5,840 தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 24.60 ரூபாய், குறைந்தபட்சம், 23 ரூபாய், சராசரி, 24.15 ரூபாய் என, மொத்தம், 46,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம், பொங்கல் பண்டிகையால் தேங்காய் ஏலம் நடக்கவில்லை. இதனால், நேற்று நடந்த ஏலத்தில், அதிகளவில் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சாலை விபத்தில் மூதாட்டி பலிவேலகவுண்டம்பட்டி அருகே, மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி காளியம்மாள், 89. இவர், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டிலிருந்து எதிர்ப்புறம் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காளியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகார்படி, விபத்தை ஏற்படுத்திய, திருச்செங்கோட்டை சேர்ந்த விஜய், 35, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இருளர் மக்களுக்கு
குறைதீர் கூட்டம்
பிலிப்பாக்குட்டையில், இருளர் சமுதாய மக்களுக்கு, நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது.
நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்., பிலிப்பாக்குட்டை கிராமத்தில், நேற்று இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு, குறைதீர் கூட்டம் நடந்தது. பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், அலுவலர் பீட்டர் செல்வராஜ், திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். 30க்கும் மேற்பட்டோர், ஜாதி சான்று கேட்டு விண்ணப்பித்தனர். மேலும், அங்கு நடந்த சிறப்பு முகாமில், மருத்துவ காப்பீடு, விஸ்வகர்மா யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு பதிவு செய்யப்பட்டது. இலவச வீட்டுமனை கேட்டு, 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்திருந்தனர்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போலீசாரின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வரும், 26ல் நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். தொடர்ந்து, சிறப்பிடம் பெற்ற மாவட்ட அரசு
அலுவலர்களுக்கு சான்றிதழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
அதை முன்னிட்டு, நாமக்கல் -- திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில், மாவட்ட ஆயுதப்
படையை சேர்ந்த ஆண், பெண் போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர். அதேபோல், சாரண, சாரணிய இயக்கம், என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
மஞ்சள் சீசன் தாமதமானதால் ஏலம் ரத்து
நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய் கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.
மஞ்சள் சீசன் தை மாத இறுதியில் தொடங்கும். ஜன., மாதத்தில் அறுவடை தொடங்கி பிப்.,ல் விற்பனைக்கு வரத்தொடங்கும். தொடர்ந்து, எட்டு மாதங்கள் வரை மஞ்சள் வரத்து இருக்கும். பின், படிப்படியாக குறையத்தொடங்கும். நவ., டிச., மாதங்களில் புதிய மஞ்சள் வரத்து இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்திருக்கும் மஞ்சளை தான்
விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மஞ்சள் சீசன் முடிந்ததால், கடந்த சில வாரங்களாகவே வரத்து குறைந்திருந்தது. இதனால், ஒரு சில வாரங்களில் மட்டும் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டது. ஜன., கடைசி வாரத்தில் புதிய மஞ்சள் ஏலத்திற்கு வரும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றும் மஞ்சள் வரத்து இல்லாததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டு மஞ்சள் சீசன் பிப்., கடைசி வாரத்தில் தான் தொடங்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
27ல் மாற்றுத்திறனாளிகளுக்கு
குறைதீர், மருத்துவ முகாம்
பள்ளிப்பாளையத்தில் வரும், 27ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது என, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிப்பாளையம் ஜி.வி., மகாலில், வரும், 27 காலை, 09:00 மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை பதிவேற்றம் செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற நடவடிக்கை எடுத்தல், 18 வயதிற்குட்பட்டோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நலத்திட்ட உதவிகள் பெற, தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், 5 புகைப்படம், ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஆற்றல் அறக்கட்டளை நிறுவனருக்கு
'சேவை செம்மல்' விருது வழங்கல்
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்வி மையம் சார்பில், சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், மக்களுக்கு காலை, மதியம், இரவு என, 3 வேளையும் தரமான உணவு வழங்கி வரும் சேவையை, ஆற்றல் அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார். இதன் மூலம் மாதந்தோறும், ஒரு லட்சம் பொதுமக்கள் பசியாற உணவு அருந்தி வருகின்றனர்.
தவிர, 10 ரூபாய் கட்டணத்தில், 19 வகையான மருத்துவ பரிசோதனை மக்களுக்கு வழங்கி வருவதால், அதன் நிறுவனர் ஆற்றல் அசோக்
குமாருக்கு, 'சேவை செம்மல்' விருதை, அமெரிக்கா, நியூ ஜெர்சி நகரின், நியூ சித்தா மைய துணைவேந்தர் சண்முக மூர்த்தி லட்சுமணன் வழங்கி கவுரவித்து பாராட்டினார். சன்மார்க்க மன்ற தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ரூ.31 லட்சம் மதிப்பீட்டில்
பல்வேறு பணிகளுக்கு பூஜை
மல்லசமுத்திரம் யூனியனுக்குட்பட்ட, மங்களம் பஞ்.,ல் ரேஷன் கடை அமைத்தல், மேல்முகம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைத்தல், பிள்ளாநத்தம் கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைத்தல், கூத்தாநத்தம் கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைத்தல் என, மொத்தம், 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு, நேற்று, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பூமிபூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். கொ.ம.தே.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், துணை
செயலாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
மகா மாரியம்மன் கோவிலில்
இன்று கும்பாபிஷேக விழா
மல்லசமுத்திரம் அருகே, மேல்முகம் கிராமம், கள்ளுக்கடை கணபதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்வவிநாயகர், மகா மாரியம்மன், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், சப்த கன்னிமார்கள் கோவிலில், இன்று காலை, 6:30 முதல், 10:00 மணி வரை கோபுர கலசங்களுக்கு புனிததீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
முன்னதாக, நேற்று மதியம், 1:00 மணிக்கு மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோவிலில் தீர்த்தக்குடம், காவடி எடுத்து, மேளதாளத்துடன் நான்குரத வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். இரண்டு குதிரை, 10 காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தார்ச்சாலையில் பள்ளம்
தோண்டியதால் எதிர்ப்பு
ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட காவேரி சாலையில், சில மாதங்களுக்கு புதிய தார்ச்சாலை போடப்பட்டது. நேற்று, தனிப்பட்ட நபர்களுக்காக தார்ச்சாலையில் பயனற்று உள்ள இரும்பு குழாயை எடுக்க, ப.வேலுார் டவுன் பஞ்., எஸ்.ஐ., குருசாமி தலைமையில் துாய்மை பணியாளர்கள், பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், 'புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையை சேதப்படுத்தக் கூடாது' என தடுத்து நிறுத்தினர். டவுன் பஞ்., ஊழியர்கள் சமாதானப்படுத்தியும், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாததால், குழிபறிக்கும் பணியை நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம், கேரளாவில்
முட்டை விலை உயர்வு
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து
பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 515 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 570, ஐதராபாத், 540, விஜயவாடா, 555, பர்வாலா, 570, மும்பை, 601, மைசூரு, 567, பெங்களூரு, 565, கோல்கட்டா, 630, டில்லி, 600 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 70 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி கிலோவுக்கு, 2 ரூபாய் உயர்த்தி, 82 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
தைப்பூச திருவிழாவையொட்டி
ஆற்றில் துாய்மைப்பணி தீவிரம்
பவேலுார் காவிரி ஆற்றில், ஆங்காங்கே குப்பை, கண்ணாடி பாட்டில்கள் கிடக்கின்றன. வரும், 25ல் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி காவடி எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு செல்வர். அப்போது, அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குப்பை, கண்ணாடி பாட்டில்கள், பழைய துணிமணிகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, ப.வேலுார் அரிமா சங்கம், டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் இணைந்து, காவிரி ஆற்றை சுத்தம் செய்தனர். இதில், இரண்டு டன் குப்பையை அப்புறப்படுத்தினர். அரிமா சங்க தலைவர் விஜயகண்ணன், டவுன் பஞ்., துப்புரவு மேஸ்திரி ஜனார்த்தனன் உடனிருந்தனர்.
மின் மோட்டார் ஒயர் திருடிய 2 பேரை
மக்கள் சுற்றி வளைப்பு
காவக்காரப்பட்டியில், மின் மோட்டாரில் இருந்து ஒயர் திருடிய, 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
எருமப்பட்டி அருகே, காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், 35; விவசாய தோட்டத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, சுவிட்ச்சை, 'ஆன்' செய்தபோது, மோட்டார் வேலை செய்யவில்லை. கிணற்றில் இறங்கி பார்த்தபோது, 3 பேர் மோட்டாருக்கு சென்ற ஒயரை வெட்டி சுற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த ரவிக்குமார் சத்தம்போட்டுள்ளார். அப்போது, கும்பல் தப்பிக்க முயன்றது. அவர்களில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், 2 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் என்.சி.எம்.எஸ்.,சில்
ரூ.1.35 கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 5,400 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,170 ரூபாய் முதல், 7,452 ரூபாய், கொட்டு மட்ட ரகம், 3,996 ரூபாய் முதல், 5,609 ரூபாய் என, மொத்தம், ஒரு கோடியே, 35 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
அதை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
சேந்தமங்கலம் அருகே
இளம்பெண் உயிரிழப்பு
சேந்தமங்கலம் அடுத்த லக்கமநாயக்கன்பட்டி, குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாலசுப்ரமணியம், 45. மனைவி சைலஜா, 40. இவர்களுக்கு கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, சில நாட்களாக குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், சைலஜாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கவுன்சிலர்கள் புகார் எதிரொலி
4 மாதத்தில் பி.டி.ஓ., மாற்றம்
அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் மாறி மாறி புகார் தெரிவித்து வந்ததால், சமாளிக்க முடியாமல், 4 மாதத்தில் பி.டி.ஓ., மாறுதலாகி சென்றார்.
எருமப்பட்டி யூனியனில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சங்கீதா தலைவராக உள்ளார். ஆனால், தி.மு.க., ஆளும் கட்சியாக உள்ளதால், யூனியன் செயலாளர் பாலசுப்பரமணியத்திற்கு தான், அதிக செல்வாக்கு உள்ளதாக பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இங்கு பணியாற்றிய பி.டி.ஓ., குணாளன், கடந்த, 4 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றார். இங்கு, பி.டி.ஓ.,வாக தமிழரசி பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., என, இரு கட்சியினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் தெரிவித்து வந்ததால், சமாளிக்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 2 நாட்களுக்கு முன் மாறுதலாகி சென்ற நிலையில், தற்போது சேந்தமங்கலம் பி.டி.ஓ.,வாக இருந்த சுகிதா, எருமப்பட்டி யூனியனில் பி.டி.ஓ.,வாக பதவியேற்றுள்ளார்.
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., எம்ப்லாயீஸ் யூனியன் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்படும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகி அங்குராஜ் தலைமை வகித்தார். அதில், பி.எஸ்.என்.எல்.,லை விட்டு வாடிக்கையாளர்கள் பெருமளவில் வெளியேறுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விரைவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 4ஜி, 5ஜி சேவைகளை துவக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு, பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்துவதை நிறுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்னையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின், ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர்களை சுரண்டுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

