ADDED : செப் 11, 2025 01:56 AM
சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை பலத்த சூறவாளி காற்றுடன் கன மழை கொட்டியது. கடந்த ஒரு வாரமாக, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து, 3 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. நேற்று காலை, மீண்டும் கடும் வெயில் வாட்டி வதைத்து. மாலை, 4:00 மணியளவில் மீண்டும் சாரல் மழை பெய்தது. போக போக மழையின் வேகம் அதிகரிக்க பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
* வெண்ணந்துார் பஞ்., யூனியன், அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பஸ் ஸ்டாப், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சில மாதத்திற்கு முன், சேலம் செல்லும் சர்வீஸ் சாலையில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய வசதி இல்லாமல் மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. நேற்று பெய்த மழையில், பஸ் ஸ்டாப் முன் குளம் போல் மழை நீர் தேங்கியது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.