/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.59.50 கோடிக்கு கறிக்கோழி விற்பனை
/
ரூ.59.50 கோடிக்கு கறிக்கோழி விற்பனை
ADDED : ஜன 19, 2024 11:44 AM
நாமக்கல்: காணும் பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 80 சதவீதம் அதிகரித்து, 70 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனையானது. அதன் மூலம், 59.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும், 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி, ஒரே நாளில் கறிக்கோழி விற்பனை, 80 சதவீதம் உயர்ந்தது, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையின்போது, தமிழகத்தில் கறிக்கோழி விற்பனை, 50 சதவீதம் மட்டுமே இருக்கும். இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் வழக்கத்தை காட்டிலும், அதிகளவில் கறிக்கோழி விற்பனையானது. வழக்கமாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு வாரம்தோறும், 2.80 கோடி கிலோ கறிக்கோழி விற்பனைக்கு அனுப்பப்படும்.
ஆனால் நேற்று முன்தினம், ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் வழக்கத்தை காட்டிலும், 80 சதவீதம் அதிகரித்து, 70 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனையானது. அதன் மூலம், 59.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இவ்வாறு கூறினார்.

