/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கபிலர்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா
/
கபிலர்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா
ADDED : ஜன 24, 2024 11:15 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கபிலர்மலை தைப்பூச தேர்த்திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகரித்துள்ளதால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே கபிலர்மலையில் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தைப்பூச திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில், திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வாகனங்களான சைக்கிளுக்கு, 20 ரூபாய், டூவீலருக்கு, 50 ரூபாய், கார்களுக்கு, 100 ரூபாய் என, பட்டியல் தயாரித்து, கபிலர்மலை பஞ்., யூனியன் அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதையறிந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கபிலக்குறிச்சி கிராம பஞ்., சார்பில், கபிலர்மலை முருகன் கோவிலின் நான்கு புறமும் தனித்தனியாக பார்க்கிங் கட்டணம் ஏலம் விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, கிழக்கு புறம், 35,400 ரூபாய், மேற்குபுறம், 7,670 ரூபாய், தெற்குபுறம், 17,700 ரூபாய், வடக்குபுறம், 30,680 ரூபாய் என, 91,450 ரூபாய்க்கு ஏலம் விட்டதாக கணக்கு காண்பித்துள்ளனர். மூன்று நாள் நடக்கும் திருவிழாவில், லட்சத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் லாரி டிராக்டர்கள் வந்து செல்லும். பார்க்கிங் கட்டண வசூல் மட்டும், 50 லட்சம் ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சொற்ப தொகைக்கு ஏலம் விட்டுள்ளதால், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, கபிலக்குறிச்சி பஞ்., தலைவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த வடிவேலிடம் கேட்டபோது,
''நிருபர்களான உங்களது சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. பஞ்., அலுவலகத்தில் விண்ணப்பம் மூலம்
எழுதிக்கொடுங்கள்,'' என்றார்.
கபிலர்மலை பஞ்., யூனியன் ஏ.பி.டி.ஓ., பரமேஸ்வரியிடம் கேட்டபோது, ''நீங்கள் கேட்கும் விபரங்களை தலைவரிடம் கேட்டுக்கொள்ளவும். ஏலத்தொகை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பார்க்கிங் கட்டணம் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் போர்டு வைக்க சொல்லி உள்ளேன்,'' என்றார்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, பார்க்கிங் கட்டணத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

