ADDED : செப் 26, 2025 02:16 AM
நாமக்கல் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் 'சுற்றுலாவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்' என்ற- விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பசுமை மன்றம், சுற்றுச்சூழல் மற்றும், சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நடந்த உலக சுற்றுலா தின நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிசாமி பங்கேற்று, ஒவ்வொரு விடுமுறை காலங்களிலும் மாணவ, மாணவியர் சுற்றுலா தலங்களுக்கு சென்று மனதை இனிமையாகவும், சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுலா தலங்களை துாய்மையாகவும், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் இல்லாதவாறும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் முத்துசாமி, கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.