/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோய் பாதித்த பாகற்காய் செடிகளை அகற்ற அறிவுரை
/
நோய் பாதித்த பாகற்காய் செடிகளை அகற்ற அறிவுரை
ADDED : பிப் 01, 2024 10:17 PM

கூடலுார்;'கூடலுாரில் பாகற்காய் செடிகளில் நோய் பரவுவதை தடுக்க, வைரஸ் நோய் பாதித்த செடிகளை அகற்ற வேண்டும்,' என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கூடலுார் பகுதி விவசாயிகள் நடப்பு ஆண்டு பரவலாக பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகற்காய் காய்க்கும் நேரத்தில், வைரஸ் நோய் தாக்கிய இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ள விவசாயிகள், 'நோயை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேவர்சோலை, பாடற்துறை பகுதியில், நோய் பாதித்த பாகற்காய் தோட்டங்களில், ஊட்டியில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகள் வினோத்குமார் (பூச்சிகள் துறை), ராஜேந்திரன் (நோயியல் துறை), ஜெயபாலகிருஷ்ணன் (மண் மற்றும் சுற்று சூழலில் துறை), கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
விவசாயிகளை சந்தித்து, 'பராமரிப்பு மற்றும் இடுப்பொருள், பூச்சி மருந்து பயன்படுத்திய முறைகள்' குறித்து கேட்டறிந்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'பாகற்காய் செடிகளை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. வெள்ளை ஈக்கள் மூலம் ஏற்படுகிறது. மாயா வகை விதையில் அதிகம் பாதிப்பு பரவுகிறது. இந்த மண்ணில் காரத்தன்மை அதிகம் இருக்கலாம்.
மண் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் நோய் தாக்கிய செடிகளை உடனடியாக அகற்றுவதன் மூலம், நோய் மற்ற செடிகளுக்கு பரவுவதை தடுக்க முடியும்,' என்றனர்.

