/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி
/
மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி
ADDED : ஜன 24, 2024 01:09 AM

ஊட்டி;ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாணவ மாணவியர் மற்றும் படித்த இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து கலெக்டர் அருணா பேசியதாவது:
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி மூலம், போட்டி தேர்வுகள், சுயதொழில் முனைதல் ஆகியவை குறித்து விளக்கப்படும் விவரங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்கள் விருப்ப துறையை தேர்ந்தெடுத்து கொள்வதுடன், அது தொடர்பான புத்தகங்களை படித்து, ஒவ்வொரு நாளும் புதிய பயனுள்ள தகவல்களை கற்று கொள்ள வேண்டும்.
ஊட்டி காந்தள் பகுதியில் அறிவுசார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நுாலகத்தில், 60 மாணவர்கள் அமர்ந்து போட்டி தேர்விற்கு தயார் செய்ய ஏதுவாக புத்தகங்கள் உள்ளன.
மேலும், பல்வேறு துறைகள் தொடர்புடைய, 5 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. எனவே, போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
மேலும், தொழில் நெறி வழிகாட்டு கையேட்டினை வெளியிட்ட கலெக்டர் இருவருக்கு வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான விவரங்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்கள் அடங்கிய புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவை வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, டி.ஆர்.ஓ., மகராஜ், சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, தொழில் மையம் பொது மேலாளர் சண்முக சிவா, வேலை வாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, கல்லூரி முதல்வர் பிராங்கிளின் ஜோஸ் உட்பட, பலர் பங்கேற்றனர்.

