விபத்தில் உயிர் பலி; தப்பிய லாரி பிடிபட்டது
தர்மபுரியைச் சேர்ந்த இளையப்பன் மகன் செந்தில்குமார், 51. தொழிலதிபர். சரவணம்பட்டி குபேர விஷ்ணு அப்பார்ட்மெண்டில் தங்கி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் காலை உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டிக்கொண்டு சென்று உள்ளார். கீரணத்தம், கல்லுக்குழி அருகே செல்லும்போது, ஒரு லாரி இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. படுகாயம் அடைந்த செந்தில் குமார் அதே இடத்தில் இறந்தார்.
கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த பாதையில் உள்ள 'சிசி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தனியார் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான லாரி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை கண்டுபிடித்து டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். 'சிசி' கேமரா காட்சியால் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய டிரைவர் பிடிபட்டுள்ளார்.
விபசார வழக்கில் 7 பேர் கைது
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் விபசாரம் நடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் மேட்டுப்பாளையம் --ஊட்டி சாலையில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது தனியார் காட்டேஜ்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு காட்டேஜ்களில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விபசார வழக்கில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜாசுந்தர், 33, ராஜ்குமார், 30, சிதம்பரத்தை சேர்ந்த மணிகண்டன், 40, தேனியை சேர்ந்த ராஜ்குமார், 42, மதுரையை சேர்ந்த வினோத், 30, கோவையை சேர்ந்த விஜய், 44, உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். விபசார அழகிகள் 3 பேரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
-தொழிலாளி பலி
பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையை சேர்ந்த ஆறுச்சாமி மகன் மணி, 49. இவர் சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரியில் உள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தில் இளநீர் இறக்கி கொண்டிருந்தபோது, மட்டை முறிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

