/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை கண்காணிப்பு குழுவினர் பணி சுமையால் மனஉளைச்சல்
/
யானை கண்காணிப்பு குழுவினர் பணி சுமையால் மனஉளைச்சல்
யானை கண்காணிப்பு குழுவினர் பணி சுமையால் மனஉளைச்சல்
யானை கண்காணிப்பு குழுவினர் பணி சுமையால் மனஉளைச்சல்
ADDED : பிப் 01, 2024 10:24 PM
பந்தலுார்;'கூடலுார் வனகோட்டத்தில் பணி புரியும் யானை கண்காணிப்பு குழுவினருக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில் ஆறு வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதுடன், அடிக்கடி மனித- விலங்கு மோதல்கள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் யானை கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தற்காலிக பணியாளர்களாக உள்ள இவர்களில் தற்போது கூடலுார் வனக்கோட்டத்தில், 120 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த ஆட்சியின் போது, மாதாந்திர ஊதியமாக, 12 ஆயிரத்து 500 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய தி.மு.க. ஆட்சியில் ஊதிய உயர்வு வழங்கப்படாததுடன், வனப்பகுதிக்குள் பணியில் ஈடுபடும் இந்த குழுவினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடை, மழை கோட்டு, காலணிகள் ஏதும் வழங்கப்படுவதில்லை.
மேலும், 'யானைகளை விரட்ட பட்டாசு பயன்படுத்த கூடாது,' என்ற நிலையில், காலை, 9:00 மணிக்கு வனத்திற்குள் விலங்குகளை விரட்ட பணிக்கு செல்லும் இவர்கள் இரவு, 8:00 மணி வரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், 12 மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு பெரும்பாலான நாட்களில், 24 மணி நேரம் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2017 -18 ஆம் ஆண்டு பணியில் இருந்த, யானை கண்காணிப்பு குழுவினர் 70 பேருக்கு, 8 மாதங்கள் சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்த நிலையில், தற்போது வரை அந்த சம்பளத்தை வழங்கவில்லை. இதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.
வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில்,' குறைந்த ஊதியத்தில், மன உளைச்சலுடன் பணியாற்றும் யானை கண்காணிப்பு குழுவினருக்கு, கூடுதல் சம்பளத்தை வழங்கவும், பணிக்கு செல்லும் போது, பாதுகாப்பு உபகரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

