/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வனத்துறை வாகனம் இயக்கம்
/
மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வனத்துறை வாகனம் இயக்கம்
ADDED : ஜன 18, 2024 10:08 PM

கூடலுார் : கூடலுார் கோடமூலா கிராம பழங்குடி மாணவர்கள், முதுமலை கார்குடி அரசு பள்ளிக்கு சென்று வர வனத்துறை மூலம் வாகன இயக்கம் துவங்கியது.
கூடலுார் தொரப்பள்ளி அருகே உள்ள, கோடமுலா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 12ம் தேதி காலை 8:00 மணிக்கு மாணவர்கள், பள்ளி செல்வதற்காக கோடமுலா சாலை வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை நோக்கி நடந்து வரும் போது, காட்டு யானை விரட்டியது. மாணவர்கள் அலறி அடித்து ஓடி உயிர் தப்பினர்.
அதில், பிளஸ்-1, படிக்கும் மாணவி காளி, 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் பொம்மன் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
தொடர்ந்து, பெற்றோர், மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதில், 'யானையை அப்பகுதியில் விரட்ட வேண்டும்; மாணவர்களை வனத்துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வர வேண்டும்; கிராமத்தை சுற்றி அகழி மற்றும் மின்வேலி அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, மாக்கமூலாவில் உள்ள, டி.எப்.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
அதன்படி, முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும், கோடமூலா பழங்குடி கிராமத்தைசேர்ந்த, 47 மாணவ, மாணவிகளை, வனத்துறையினர் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு அழைத்து சென்று வரும் பணியை நேற்று, முதல் துவங்கி உள்ளனர்.

