/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மோட்டார் சைக்கிள், நகை திருட்டு: ஒருவர் கைது
/
மோட்டார் சைக்கிள், நகை திருட்டு: ஒருவர் கைது
ADDED : செப் 25, 2025 11:41 PM
ஊட்டி; ஊட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டியில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் கடந்த ஜூலை, 25ம் தேதி விடுதியில் பணிபுரிந்து கொண்டே கல்லுாரியில் படிக்கும் மாணவர் ஒருவரின், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போனது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிய வந்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள டாக்டர் ஒருவரின் வீட்டில் புகுந்து திருட முயன்று பணம் கிடைக்காததால் அங்கேயே துாங்கிவிட்டு சென்றதும் தெரிய வந்தது.
இது குறித்து, கல்லூரி மாணவர் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திருடனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். விசாரணையில், ஊட்டியில் திருடிய மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு, திண்டுக்கல் சென்று, 80 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்னை சென்றார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, நீலகிரி போலீசாரும், திண்டுக்கல் போலீசாரும் இணைந்து சென்னையில் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ, 42, என்பதும், திருட்டில் ஈடுபட்டு வந்ததில் அவர் மீது, 30 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
முதலில், 80 பவுன் திருட்டு வழக்கில் கடந்த வாரம் திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். தற்போது, மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் நீலகிரி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.