/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை வாய்ப்புக்காக ஓரிடம் விட்டு வேறிடம்; தொழில் துவங்க ஊராட்சி நிர்வாகம் அழைப்பு
/
வேலை வாய்ப்புக்காக ஓரிடம் விட்டு வேறிடம்; தொழில் துவங்க ஊராட்சி நிர்வாகம் அழைப்பு
வேலை வாய்ப்புக்காக ஓரிடம் விட்டு வேறிடம்; தொழில் துவங்க ஊராட்சி நிர்வாகம் அழைப்பு
வேலை வாய்ப்புக்காக ஓரிடம் விட்டு வேறிடம்; தொழில் துவங்க ஊராட்சி நிர்வாகம் அழைப்பு
ADDED : ஜன 19, 2024 12:27 AM

அன்னுார் : அன்னுாரின் வடக்கு பகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால், மிகவும் பின்தங்கி, வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தொழில் நிறுவனம் துவக்க ஊராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், அதிக ஸ்பின்னிங் மில்கள் உள்ள ஒன்றியங்களில், அன்னுார் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அன்னுாருக்கு தெற்கே கரியாம்பாளையம், காரே கவுண்டன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், குன்னத்துார், மசக்கவுண்டன் செட்டிபாளையம் உட்பட 11 ஊராட்சிகள் உள்ளன; இவற்றில், 90 ஸ்பின்னிங் மில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்துடன் 'பவுண்டரி கிளஸ்டர்' திட்டத்தில், தெற்கு பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறு, குறு பவுண்டரிகள் நிறுவப்பட்டுள்ளன.
காட்டம்பட்டி மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிகளில் ஸ்டில் ரோலிங் மில்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. வெளிமாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
ஆனால், சத்தி செல்லும் பாதையில், அன்னுாரின் வடக்கு பகுதியில் உள்ள 10 ஊராட்சிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு மட்டுமே தொழிற்சாலைகள் உள்ளன. இதுகுறித்து, வடக்கு பகுதி மக்கள் கூறியதாவது:
அன்னுாருக்கு வடக்கே, குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, கனுவக்கரை, ஆம்போதி, பசூர், அ.மேட்டுப்பாளையம், வடக்கலுார், பொகலுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி என பத்து ஊராட்சிகள் உள்ளன. பத்து ஊராட்சிகளிலும் சேர்ந்து, மொத்தம் பத்து நுாற்பாலைகள் தான் உள்ளன. பவுண்டரிகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், விசைத்தறிகள் என, ஒன்று இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இங்கு உள்ளன. இதனால், இப்பகுதி மிகவும் பின்தங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ளவர்கள் வேலைவாய்ப்புக்காக, திருப்பூர் மற்றும் கோவை மாநகருக்கு தினமும் சென்று வருகின்றனர். அன்னுாரின் வடக்கு பகுதியில் வளர்ச்சிப் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படவில்லை.
ஸ்பின்னிங் மில்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் இல்லை. இங்கு நிலத்தின் மதிப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, தாங்களாக விரும்பி நிலத்தை தருவோரிடமிருந்து நிலத்தை பெற்று, அன்னுாரின் வடக்கு பகுதியில் ஸ்பின்னிங் மில், ஐ.டி., நிறுவனங்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் ஆகியவற்றை துவக்கி இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். இப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பட உதவ வேண்டும்.
இவ்வாறு, மக்கள் கூறினர்.

