/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டில் ஒன்று; தேர்வு செய்வது நன்று! தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
/
இரண்டில் ஒன்று; தேர்வு செய்வது நன்று! தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
இரண்டில் ஒன்று; தேர்வு செய்வது நன்று! தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
இரண்டில் ஒன்று; தேர்வு செய்வது நன்று! தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜன 19, 2024 12:21 AM
சூலுார்: சூலுார் சட்டசபை தொகுதியில், 2,823 வாக்காளர்களுக்கு, இரு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது தேர்தல் ஆணைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏதேனும் ஒரு இடத்தில் பெயரை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி, சூலுாரில், 3 லட்சத்து, 18 ஆயிரத்து, 18 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, படிவங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜன.22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறந்தவர்கள் பெயர்கள் மற்றும் இரட்டை பதிவுகளை நீக்க அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்வதற்கு முன், அவர்களுக்கு வீட்டுக்கு சென்று அலுவலர்கள் உறுதிப்படுத்தினர். அதன் பின்னரே, இறந்தவர்கள் பெயர்கள் முறையாக நீக்கப்பட்டன. இரட்டை பதிவு தொடர்பாக, மென்பொருள் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். அதில், சூலுார் சட்டசபை தொகுதியில் மட்டும், 2,823 வாக்காளர்களின் பெயர்கள், முகவரி, புகைப்படங்கள் இரு வேறு இடங்களில் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இரு இடங்களில் ஓட்டுரிமை உள்ள வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பி, அவர்கள் விரும்பும் ஒரு இடத்தில் மட்டும் ஓட்டுரிமை வழங்கி விட்டு, மற்றொரு இடத்தில் உள்ள பதிவை நீக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, சூலுார் சட்டசபை தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வாக்காளர்களின் பெயர்கள், தற்போது வசிக்கும் இடத்தில் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும். இரு இடங்களில் ஓட்டுரிமை இருக்கும் வாக்காளர்களின் வீடுகளுக்கு, தபால் மூலமாக, படிவம் 'ஏ' அனுப்பப்பட்டுள்ளது.அதில், அவர்கள் தற்போது வசிக்கும் முகவரியை 'டிக்' செய்து அனுப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்து, வாக்காளரோ, 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினரோ கையெழுத்து இட்டு, வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
படிவத்துடன் உறுதிப்படுத்தும் கடிதத்தையும் இணைந்து அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தி இருந்தோம். 20 சதவீத படிவங்கள் திரும்ப வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து, ஒரு இடத்தில் இருக்கும் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

