/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குந்தா 'சில்ஹல்லா' மின் திட்டத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு
/
குந்தா 'சில்ஹல்லா' மின் திட்டத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு
குந்தா 'சில்ஹல்லா' மின் திட்டத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு
குந்தா 'சில்ஹல்லா' மின் திட்டத்திற்கு எதிர்ப்பு; பாதுகாப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 24, 2025 10:52 PM

ஊட்டி; சில்ஹல்லா மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில்ஹல்லா நீர் பிடிப்பு பாதுகாப்பு குழுவினர் பழங்குடியின மக்களுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மஞ்சூர் அருகில் குந்தா ஆற்றின் துணை ஆறான சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே பிக்குளி பாலம் அருகில் அணை எழுப்பி, 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் திறன் கொண்ட சில்ஹல்லா நீர்மின் திட்டம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை இரு கட்டங்களாகச் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதில், குந்தா அடுத்த சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே, 75 மீட்டர் உயரத்தில் ஒரு அணை மற்றும் குந்தா ஆற்றின் குறுக்கே, 108 மீட்டர் உயரத்தில் ஒரு அணை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை முறையே, மேலணை மற்றும் கீழணையாக கொண்டு, 2.8 கி.மீ., துாரத்துக்கு குகை வழி நீர்க்குழாய்கள் அமைத்து இந்த நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது நீர்மின் நிலையமாக மட்டுமன்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கு மொத்தம், 980 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தால், விவசாய நிலங்களை இழக்க வேண்டி வரும் எனக் கூறி, 30 க்கு மேற்பட்ட கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில்ஹல்லா நீர் பிடிப்பு பகுதி பாதுகாப்பு குழு மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் சிவலிங்கம் தலைமையில் பழங்குடியின மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதன் பின், சிவலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், ''சில்ஹல்லா திட்டம் வளர்ச்சி பாதைக்கு வழி வகுக்காது, இங்கு அமைக்க உள்ள சுரங்க பாதை அணைகள் பேரழிவுக்கு வழிவகுக்கும். எனவே, சில்ஹல்லா நீர்மின் திட்டத்தை நிறுத்தி, வெளிப்படையான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்,'' என்றார்.