/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழா போட்டி; இளைஞர்களுக்கு பரிசு
/
பொங்கல் விழா போட்டி; இளைஞர்களுக்கு பரிசு
ADDED : ஜன 19, 2024 12:25 AM

அன்னுார் : பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அன்னுார் அ.மு. காலனியில், பொங்கல் விழாவை முன்னிட்டு, கோலம், ஓட்டம், தடையோட்டம், லக்கி கார்னர் என போட்டிகள், சிறுவர், சிறுமியரின் தனி நடனம், குழு நடனம் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் பாரதி பேசுகையில், ''தமிழகத்தில், சமச்சீர் கல்வி, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., என பல்வேறு கல்வி திட்டங்கள் உள்ளன. ஏழை, எளிய மாணவர்கள், சமச்சீர் கல்வி மட்டும் கற்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், வசதி உள்ளோர் வேறு பாடத்திட்டங்களில் படிக்கின்றனர். ஆனால், இருவரும் ஒரே போட்டி தேர்வு எழுதும் போது, ஏழை எளிய மக்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. பாகுபாடற்ற கல்வி அனைவருக்கும் வழங்க வேண்டும்,'' என்றார்.
வாலிபர் சங்க, ஒன்றிய முன்னாள் தலைவர் மகேந்திரன் பேசுகையில், ''இன்னும் பல கோடி பேர் அடிப்படை கல்வி பெறாமல் உள்ளனர். பல கோடி குடும்பங்கள், வறுமை கோட்டுக்கு கீழ், சொந்த இடமோ, வீடோ இல்லாமல் உள்ளனர்,'' என்றார்.
போட்டிகளில் வென்றவர்கள், பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* கோவில்பாளையம் அருகே கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி காந்திநகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச்சங்கத்தில் சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் இளங்கோவன், செயலாளர் ராஜன், பொருளாளர் அப்துல் ரபீக் உட்பட பலர் பங்கேற்றனர்.

