/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
/
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
ADDED : பிப் 01, 2024 10:15 PM

கோத்தகிரி:கோத்தகிரி 'லாங்வுட்' சோலை, 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டதால், மலை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி நகரை ஒட்டி, 286 ஏக்கர் பரப்பளவில் லாங்வுட் சோலை அமைத்துள்ளது. இந்த சோலை, சுற்றியுள்ள, 25 குக்கிராமங்களை சேர்ந்த, 50 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இங்கு, '35 வகையான உள்ளூர் மர வகைகள், நுாற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள், பெரணிகள்,' என, இயற்கையின் அனைத்து வகையான வளங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த சிறப்பை பெற்றுள்ள இந்த சோலை நகரின் 'மைக்ரோ கிளைமேட்டை' நிர்ணயிக்கிறது.
வெளிநாட்டு பறவைகள் வருகை
இந்த சோலைக்கு, 14 வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வலசை வருவது தொடர்கிறது. இந்த காடுகளை, 55 வகையாக அறிவியலாளர்கள் பகுத்துள்ளனர். இங்குள்ள மரவகைகள், 20 மீட்டர் உயரம் வரை வளர்ந்து பின்னர், நிழற்குடையாக விரிவது இச்சோலை காட்டின் சிறப்பம்சம். இதன் காரணமாக, இங்கு பெய்யும் மழையில், 75 சதவீதம் நீரை பூமியில் சேமித்து வைத்து, கோடை காலத்தில் சிறு, சிறு ஊற்றுகளாக குடிநீராக வெளியேறி வருவதால், உள்ளூர் மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.
இங்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வன வளம் குறித்து அறிந்து கொள்ள ஆண்டு முழுவதும் வருகின்றனர்.
உலகளவிலான அங்கீகாரம்
இது போன்ற பல சிறப்பம்சங்களை கருத்தில் கொண்ட மாநில அரசு, இந்த சோலையை உலக பல்லுயிர் சூழல் மையமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசு காமன் வெல்த் நாடுகளுக்கான, 'அரசியின் நிழற்குடை' என்ற உலக அளவிலான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. தற்போது, இந்த சோலை, 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லாங்வுட் சோலை, உலகளவில் முக்கிய மழைகாடு என்ற உன்னதத்தை பெற்றுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் 'ஹாட்ஸ்பாட்' என்ற முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
'தினமலர் பாராட்டுக்குரியது'
லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ கூறுகையில், ''லாங்வுட் சோலை போன்ற காடுகள், ஒரு எக்டர் பரப்பில் வினாடிக்கு, 750 லிட்டர் நீரை தரும்,' என, ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த சோலையை உள்ளூர் மக்கள்; அரசு நிர்வாகங்கள் சிறப்பாக பாதுகாத்தமைக்கு கிடைத்த வெற்றி. மேலும், லாங்வுட் சோலையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பலமுறை செய்தி வெளியிட்ட 'தினமலர்' நாளிதழின் பங்கும் பாராட்டுக்குரியது. எதிர்வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, உள்ளூர் மக்கள், மாணவர்கள் இந்த சோலையை பாதுகாக்க உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

