/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பணைக்கு நல்ல வழி காட்டு சாமி; புதுப்பாளையத்தில் புதுமை பொங்கல்
/
தடுப்பணைக்கு நல்ல வழி காட்டு சாமி; புதுப்பாளையத்தில் புதுமை பொங்கல்
தடுப்பணைக்கு நல்ல வழி காட்டு சாமி; புதுப்பாளையத்தில் புதுமை பொங்கல்
தடுப்பணைக்கு நல்ல வழி காட்டு சாமி; புதுப்பாளையத்தில் புதுமை பொங்கல்
ADDED : ஜன 19, 2024 12:22 AM
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தடுப்பணையை சீரமைக்க, இயற்கையை வேண்டி பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தில், ஒன்பது ஏக்கர் பரப்பில் புதுப்பாளையம் தடுப்பணை உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி, தடுப்பணை கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது. அதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. தடுப்பணையை சுத்தம் செய்யவும், வண்டல் மண்ணை அகற்றி சீரமைக்கவும், புதுப்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன், கடந்த ஆறு மாதங்களாக, கோவை கவுசிகா நீர் கரங்கள் கூட்டமைப்பு முயற்சியில் ஒன்றிணைந்து, புதுப்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டு, பெரும் நம்பிக்கையுடன் தடுப்பணைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி எழுத்துப்பூர்வமான அனுமதி மற்றும் தொடர் வழிகாட்டுதலின் பேரில், தொடர்ந்து பல ஆய்வுகள் 'ட்ரோன்' வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. மேலும், பெருமழை காலங்களில் தடுப்பணை முன்புறம் அமைந்துள்ள ரயில்வே பாலம் அருகே மக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக தரைப்பாலம் அமைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுப்பாளையம் தடுப்பணையை சீராக்கி, இப்பகுதி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், நன்மை விளைவிக்கும் தடுப்பணையாக மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய, தடுப்பணை அருகே பொங்கல் வைத்தல், பூ பறித்தல், கும்மியாட்டம், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடந்தன.

