/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக- - கர்நாடக சோதனை சாவடி: 'பிளாஸ்டிக்' ஆய்வு
/
தமிழக- - கர்நாடக சோதனை சாவடி: 'பிளாஸ்டிக்' ஆய்வு
ADDED : பிப் 01, 2024 10:59 PM
கூடலுார்;தமிழக- கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி வழியாக, இயக்கப்படும் வாகனங்களில் கொண்டு வரப்படும் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும், 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட எல்லைகளில் உள்ள, 9 சோதனை சாவடிகளில், சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது.
ஆனால், சமீப காலமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருள்கள். பிளாஸ்டிக் பாட்டில்களை, எடுத்து வந்து பயன்படுத்திய பின், சாலையோர வனப்பகுதிகள், பொது இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால், வனச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும், குப்பை தொட்டிகளில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், சிதறி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள் உண்பதால் அவைகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, தமிழக -கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி, தொரப்பள்ளி சோதனை சாவடிகளில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு உள்ளதா என்பது குறித்து நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, குமார் உடனிருந்தனர்.

