ADDED : ஜன 19, 2024 12:24 AM

அன்னுார் : 'அறநெறியுடன் வாழ்வோருக்கு, ஆண்டவர் துணை இருப்பார்,' என தமிழ்ச் சங்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் அருகே, நல்லகவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், கவையன்புத்துார் தமிழ் சங்கம், ஜோதி மைய அறக்கட்டளை, தொல்காப்பியர் தமிழ் சங்கமம் சார்பில் நடந்தது முப்பெரும் விழா.
ஆசிரம நிறுவனர் குருஜி சிவ ஆத்மா, விழாவை துவக்கி வைத்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறப்பு விருந்தினர் கிறிஸ்டோபர், முன்னிலை வகித்தார். சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பவளக்கொடி கும்மி குழுவினர், பேபி தலைமையில் 50 பேர் பாரம்பரிய நடனம் ஆடினர். முதன்மை கல்வி முன்னாள் அலுவலர் நாராயணசாமி பேசுகையில்,
''மனிதனை மனிதனாக வாழ வைக்கும் அருமருந்து, அன்பு. அறவழியில் யார் நடக்கிறாரோ அவர் அருகே ஆண்டவர் துணை இருப்பார்,'' என்றார்.
ஜோதி மைய அறக்கட்டளை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''பிற உயிர்களையும் தன்னுயிர் போல பேணியவர் வள்ளலார். அவர் காட்டும் வழியில் நடந்தால் வாழ்வு செழிக்கும்,'' என்றார்.
தொல்காப்பியர் தமிழ் சங்கம தலைவர் காளியப்பன் பேசுகையில், ''வருங்காலம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
எனவே, இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என்றார். சென்னை அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ''தவறான வழியில் பொருள் சேர்த்து, தனக்காக மட்டும் வாழும் மனிதர், பின் நாட்களில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதை உணர்ந்து, மகான்கள் காட்டிய வழியில் வாழ வேண்டும்,'' என்றார்.
கம்பர் குறித்த கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் சூரியநாராயணன், முன்னாள் தலைமை ஆசிரியர் கோபால்சாமி, உதவி பேராசிரியர் கணேசன் உட்பட பலர் பேசினர்.

