/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்
/
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்
UPDATED : ஜன 19, 2024 02:06 AM
ADDED : ஜன 19, 2024 02:05 AM

ஊட்டி:ஊட்டியில் தாமதமாக உறைபனி அதிகரித்துள்ள நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியசாக குறைந்தது. இதனால் பல இடங்களில் உறை பனி தாக்கம் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவ., மாதம் துவங்கும் உறை பனி, ஜன., மாதம் இறுதி வரை நிலவுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்ததால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனி பொழிவு தாமதமாக துவங்கியது.
கடந்த மாதம் டிச., 24ம் தேதி தென்பட்ட உறை பனியின் போது, குறைந்த பட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியசாக பதிவானது.
அதன் பின், கடும் மேகமூட்டமும், மழையும் பெய்ததால் உறை பனி தென்படவில்லை. நீர் பனி மட்டும் அவ்வப்போது காணப்பட்டது.
தற்போது, மீண்டும் உறைபனி அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஊட்டியில், அதிகபட்ச வெப்பநிலை, 20; குறைந்த பட்சம், 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காந்தள், தலைகுந்தா, பைக்காரா, அவலாஞ்சி, குன்னுாரில் காலை முதல் புல்வெளிகளில் அதிகளவில் பனி படர்ந்து காணப்பட்டது.
ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின்,நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி விவசாயி ராமன் கூறுகையில், ''காலநிலை மாற்றத்தால், டிச., மாதம் நிலவவேண்டிய கடும் உறைபனி சற்று தாமதமாக ஜன., மாதம் பெய்துள்ளது. இதனால், தேயிலை, மலை காய்கறி விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இன்னும் மைனஸ் இல்லை!
ஊட்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில், '' ஊட்டியில் இன்று (நேற்று) குறைந்த பட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியதாக இருந்தது. ''ஜீரோ டிகிரி மற்றும் மைனஸ் டிகிரி' செல்ஷியசுக்கு வரவில்லை,'' என்றார்.

