/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர், மின் வசதியின்றி அவதிப்படும் பழங்குடிகள்
/
குடிநீர், மின் வசதியின்றி அவதிப்படும் பழங்குடிகள்
ADDED : அக் 14, 2025 08:55 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே ஏலமன்னா பழங்குடியின கிராமத்தில், குடிநீர், மின்சார வசதி இல்லாமல் பழங்குடியின மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில்பன்னிக்கொல்லி பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 15 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் குடியிருப்புகள் பழுதடைந்து குடியிருக்க முடியாத நிலைக்கு மாறியது. இங்கு புதிதாக வீடுகள் கட்ட வசதி இல்லாத நிலையில், இவர்களுக்கு ஏலமன்னா பகுதியில் சாலை ஓரத்தில் புதிதாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சி சார்பில் தலா, 4.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 15 அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது.
விளக்கு வெச்சத்தில் வாழ்க்கை ஆனால், இவர்களுக்கு மின்சார வசதி தரப்படாத நிலையில், பழங்காலத்தை போல் மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், இவர்களுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டும் ரேஷன் கடையில் வழங்கப்படும் நிலையில், இதனை வைத்து ஒரு மாதத்திற்கு விளக்கு எரிக்க முடியாத நிலையில் உள்ளனர். குடிநீர் வசதி ஏற்படுத்தி தராத நிலையில், குடியிருப்புகளை ஒட்டிய சதுப்பு நிலத்தில் சுகாதாரமற்ற சிறிய குழியில் உள்ள தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
பழங்குடியின மக்கள் கூறுகையில், 'ஏற்கனவே குடியிருந்த வீடுகள் சேதமடைந்து காணப்பட்டதால், புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டது. சாலை ஓரத்தில் வீடுகள் கட்டி தரப்பட்டதால் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், மின் வசதி இல்லாததால், இரவில் வீடுகளின் அருகே யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்கு வந்து நின்றாலும் தெரியாத நிலையில், உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
நடவடிக்கை எடுக்க உறுதி மின்சார வசதி கேட்டால், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான முழு விவரங்களை தெரிவிக்காத நிலையில் குடிநீரும் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் பழங்காலத்தை போல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,' என்றனர்.
இந்த தகவலை அறிந்த பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''இப்பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து தீர்வு காணப்படும். மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

