ADDED : ஜன 23, 2024 11:45 PM
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே கதிர் நாயக்கன் பாளையத்தில் நள்ளிரவில் தகர ஷெட்டை காட்டு யானைகள் உடைத்தன. இதைப் பார்த்து அங்கிருந்த பெண் ஒருவர் குழந்தையுடன் உயிர் தப்பி ஓடினார்.
கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், காட்டு யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. நேற்று முன்தினம் இரவு, கதிர் நாயக்கன்பாளையம் கிரீன் பீல்ட் பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் வந்தன. அங்கு கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு, தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. தகர ஷெட்டை உடைத்து உள்ளே இருந்த மளிகை பொருட்களை எடுக்க, காட்டு யானைகள் முயன்றன. இதனால், அஞ்சிய அங்கு வசித்த பெண் ஒருவர், தனது குழந்தையுடன் யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பி ஓடினார். சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை வரை, அதே பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் பின்னர் மலையடிவாரம் நோக்கி சென்றன.

