/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை ஆமைகள் பாதுகாப்பது அவசியம்
/
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை ஆமைகள் பாதுகாப்பது அவசியம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை ஆமைகள் பாதுகாப்பது அவசியம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை ஆமைகள் பாதுகாப்பது அவசியம்
ADDED : ஜன 19, 2024 04:34 AM

ராமநாதபுரம்: கடல் சுற்றுச்சூழல் துாய்மை காவலர் என்றழைக்கப்படும் அரிய வகை ஆமைகள் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அதிகளவில் வாழ்கின்றன. இவற்றை மாமிசம், முட்டைகளை உணவாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். அழிந்து வரும் அரியவகை ஆமைகளை பாதுகாக்க மீனவர்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் வளம் நிறைந்த பகுதியாகும். இங்கு கடல் குதிரைகள், ஆமைகள், டால்பின்கள், கடல் பசுக்கள், பவளப்பாறைகள், திமிலங்கள், வண்ண மீன்கள், கடல் பாம்புகள், முத்துச்சிப்பிகள் போன்ற பல அரிய உயினங்கள் வாழ்கின்றன.
இவற்றுள் கடல் சூழல் துாய்மை காவலர்கள் என்றழைக்கப்படும் கடல் ஆமை இனம் அழிந்து வருகிறது. இவற்றை பாதுகாக்க மன்னர் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
உலகில் ஏழு வகையான ஆமைகள் உள்ளன. இதில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை, சித்தாமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் வாழ்கின்றன. கடலில் விஷத் தன்மையுள்ள ஜெல்லி மீன்களை ஆமைகள் உட்கொள்கின்றன.
மேலும் பவளப்பாறையில் படியும் பாசிகளை சாப்பிடுகின்றன. கடல் வளத்தை பாதுகாப்பதில் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக கடல் சுற்றுசூழல் துாய்மை காவலர் என ஆமைகளை கூறுகின்றனர்.
அழிவுக்கு காரணம்
கடல் ஆமைகள் காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. வேட்டையாடுதல், கடலோரத்தில் சுற்றுலா மூலம் பெருகும் வீடுகள், ஓட்டல்கள், மின்விளக்குகள் காரணமாக பெரும்பாலானவை குஞ்சுகளாக இருக்கும் போதே திசை தப்பிவிடுகின்றன அல்லது இறந்தும் விடுகின்றன.
மேலும் கடலுக்குள் அதிகரித்துள்ள வெப்பம், மாசு போன்ற காரணங்களும், நவீன மீன்பிடித் தொழில்முறையும் இதன் அழிவுக்கு காரணமாகின்றன. தனுஷ்கோடி, மண்டபம், கீழக்கரை, ராமநாதபுரம் ஆகிய கடற்கரைபகுதியில் சித்தாமைகள் அதிகளவில் காணப்படுவதால் இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
நவ., டிச., மாதங்களில் இனப்பெருக்கம் நடக்கிறது. இதற்கு முந்தைய உறவிற்காக ஆமைகள் கடற்கரையை நோக்கி வருகின்றன. கடந்த காலங்களில் வலைகளில் சிக்கிய ஆமைகளை துடுப்புகளை வெட்டி எறிந்து உயிர்சேதம் ஏற்படுத்தினர்.
இதையடுத்து ஆமைகளின் பயன், அதனை எவ்வாறு பாதுகாப்பது என வனத்துறையினர் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பாதுகாக்கும் வழிமுறைகள்
இதுகுறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை காப்பாளர் பகான் ஜெக்தீஸ் சுதாகர் அறிவுறுத்தலின் படி ஆமைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். முட்டையிட கடற்கரைக்கும் வரும் ஆமைகளை காக்கவும், அவை முட்டையிடும் பகுதிகளை பாதுகாக்கவும் மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வலைகளில் சிக்கும் ஆமைகள், அவற்றின் குஞ்சுகளை உடனே மீனவர்கள் கடலில் விட வேண்டும். அவ்வாறு இவ்வாண்டில் மட்டும் 36 பேர் ஆமைகளை பாதுகாத்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1000, டி-சர்ட், தொப்பி ஆகியவை பரிசாக வழங்கப்படும். இதுவே டால்பின், கடல் பசுவாக இருந்தால் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
தனுஷ்கோடியில் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்கும் தற்காலிக மையம் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் 25 ஆயிரம் வரை ஆமை குஞ்சுகள் பொரிக்கப்பட்டு தனி விழாவாக கொண்டாடி மலர் துாவி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்படுகிறது.
இனப்பெருக்க காலத்தில் வேட்டை தடுப்பு காவலர், ஆமை வாட்சர் மூலம் கடற்கரை பகுதியில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பழைய வலைகளை கடலில் வீசி எறியக்கூடாது. பாலிதீன் பயன்படுத்த கூடாது என பல்வேறு விழிப்புணர்வை மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்படுத்துகிறோம் என்றார்.

