/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பாடலிபுத்திரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ
/
பாடலிபுத்திரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ
ADDED : ஜன 23, 2024 11:10 PM
அரக்கோணம்:பெங்களூரிலிருந்து, பாடலிபுத்திரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால், அரக்கோணம் அருகே ரயில் நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்ட பின், 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து, காட்பாடி, அரக்கோணம் வழியாக, பீஹார் மாநிலம் பாடலிபுத்திராவுக்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இது நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், அரக்கோணம் அடுத்த முகுந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றது.
அப்போது, ரயில் இன்ஜினில் இருந்து, இரண்டாவதாக இருந்த பொதுப்பெட்டியின் சக்கரங்கள் இறுக்கிப் பிடித்து, இயல்பான வேகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், லேசாக புகை வந்தது.
இதனால், ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, சக்கரம் பகுதியில் லேசாக தீப்பிடித்து புகை வந்தது.
உடனடியாக ரயில்வே ஊழியர்கள் தீயை அணைத்து, ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதன்பின்னர், 20 நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

