/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜன.21ல் தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு
/
ஜன.21ல் தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு
UPDATED : ஜன 19, 2024 03:17 PM
ADDED : ஜன 19, 2024 02:36 AM
சேலம்:சேலத்தில் ஜன. 21ல் நடைபெறும், தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாட்டுக்காக, நாளை மாலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு, கடந்த டிச., 17ல் நடைபெறும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கப்பட்டன. சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, மீண்டும் டிச., 24க்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் மீட்பு பணி காரணமாக, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டு முறை ஒத்தி வைப்புக்கு பின், வரும் ஜனவரி 21ல் மாநாடு நடைபெறும் என தி.மு.க., அறிவித்தது. இதன்படி, மிக பிரம்மாண்டமாக, இளைஞரணி மாநாட்டை நடத்தி முடிக்க, அமைச்சர்கள், நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர்.
மாநாட்டு பந்தல், வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உணவு கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க., இளைஞரணி மாநாட்டு நுழைவு வாயிலுக்கு, ஈ.வெ.ரா., பெயர், மாநாட்டு திடலுக்கு அண்ணாதுரை பெயர், அரங்கத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை தவிர பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடிமேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி, வீரபாண்டி ராஜா, வீரபாண்டி செழியன், சந்திரசேகர், நீட் போராளிகள் அனிதா மற்றும் தனுஷ் ஆகியோர் பெயர்களில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை மாலை, விமானம் வாயிலாக சேலம் வரும் ஸ்டாலின், மாநாட்டு திடலில் இரு சக்கர வாகன பேரணியை பார்வையிடுகிறார். தொடர்ந்து முதல்வர் முன்னிலையில், ட்ரோன் ஷோ நடைபெறுகிறது. முடிந்ததும் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் ஓய்வெடுக்கிறார்.ஜன., 21, காலை, 9:00 மணிக்கு, மாநாட்டு திடலின் முன், 100 அடி கொடிக்கம்பத்தில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி கொடியேற்றுதலோடு மாநாடு துவங்குகிறது.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முன்னதாக பல்வேறு தலைப்புகளில் கட்சி பிரமுகர்கள் பேசுகின்றனர்.தொடர்ந்து 22 தலைப்புகளில், பல்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றனர். மாலை 6:00 மணிக்கு, இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி பேசுகிறார். பின், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நுால்கள் வெளியீடு, கட்சி முன்னோடிகளுக்கு மரியாதை செய்தல், நீட் விலக்கு நம் இலக்கு அஞ்சல் அட்டை ஒப்படைப்பு புதுகை பூபாளம் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி, பாடகர் தெருக்குரல் அறிவின் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

