/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைமறைவு குற்றவாளி 12 ஆண்டுக்கு பின் கைது
/
தலைமறைவு குற்றவாளி 12 ஆண்டுக்கு பின் கைது
ADDED : மே 21, 2025 01:43 AM
தாரமங்கலம்,தாரமங்கலம், பட்டக்கார கந்தமுதலி தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள், 77. இவர் கடந்த, 2013 மார்ச், 16ல் ஐந்து முனியப்பன் கோவில் பகுதியிலுள்ள, மனவளக்கலை மன்றத்திற்கு சென்றார். அப்போது, பல்சர் பைக்கில் வந்த இருவர் மொபைல்போனில் பேசியபடி, பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 6 பவுன் தங்க செயினை பறித்தனர். சுதாரித்து கொண்ட பாப்பம்மாள் செயினை கையில் பிடித்த போது, திருடர்கள் இழுத்ததில் செயின் அறுந்து மூன்று பவுனை பறித்து சென்றனர்.
தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, பவளத்தானுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பாலமுரளி, 39, முருகன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு இரண்டு மாதத்தில் ஜாமினில் வந்த இருவரில் பாலமுரளி தலைமறைவானார். இதில் 12 ஆண்டுகளுக்கு பின், மேட்டுபாளையம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பாலமுரளியை, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தாரமங்கலம் எஸ்ஐ., மாதையன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில்,' பாலமுரளி ஜாமினில் வெளிவந்த பிறகு, கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதிக்கு சென்று தலைமறைவாக இருந்துள்ளார். அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அங்கு வருமானம் குறைவாக கிடைத்ததால், சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தார். பாலமுரளி பற்றிய தகவல் கிடைத்தவுடன், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நேற்று கைது செய்தோம்,' என்றனர்.

