/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சிக்னல்' கிடைக்காமல் மலைக்கிராம மக்கள் அவதி: அவசர உதவிக்கு கூட தொடர்பு கொள்வதில் சிக்கல்
/
'சிக்னல்' கிடைக்காமல் மலைக்கிராம மக்கள் அவதி: அவசர உதவிக்கு கூட தொடர்பு கொள்வதில் சிக்கல்
'சிக்னல்' கிடைக்காமல் மலைக்கிராம மக்கள் அவதி: அவசர உதவிக்கு கூட தொடர்பு கொள்வதில் சிக்கல்
'சிக்னல்' கிடைக்காமல் மலைக்கிராம மக்கள் அவதி: அவசர உதவிக்கு கூட தொடர்பு கொள்வதில் சிக்கல்
ADDED : ஜன 19, 2024 10:18 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சியில் வேடப்பட்டி, நுாலாத்துக்கோம்பை, சாமகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில், 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அரளி உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. மலை கிராம மக்கள், மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். ஆனால் அப்பகுதியில் மொபைல் போன் கோபுரங்கள் இல்லை. இதனால், 'சிக்னல்' சரிவர கிடைப்பதில்லை.
கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவியர், போட்டித்தேர்வுக்கு தயாரகும் இளைஞர்கள், 'சிக்னல்' கிடைக்காததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடிவதில்லை. இரவில் போலீஸ், வனத்துறை, மருத்துவம் போன்ற அவசர உதவிக்கு யாரையும் தொடர்புகொள்ள முடியாத அவல நிலை தொடர்கிறது.
நவீன வசதிகள் நகரத்துடன் நின்று விடுவதால் கிராம மக்களுக்கு எட்டுவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைக்கு தகவல் தொடர்பு முக்கியம். அந்த வசதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், மக்களின் வாழ்கைத்தரம் உயருவதிலும் தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ.,வின் மாவட்ட விவசாய பிரிவு துணை தலைவர் வெங்கடேஷ்பாபு கூறுகையில், ''சிக்னல் தேடி கரடு, மரம், பாறை மீது ஏறி நின்று பேச வேண்டியுள்ளது. பேசிக்கொண்டிருக்கும்போதே துண்டிக்கப்படுகிறது. சாமகுட்டப்பட்டியில் தனியார் மொபைல் நிறுவனம் கோபுரம் அமைக்க, 'பேஸ்மட்டம்' போட்டனர். அது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் கோபுரம் அமைக்க, சேலம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் முறையிட்டோம். மத்திய அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலனை செய்வதாக பதில் வந்துள்ளது,'' என்றார்.
தும்பல்பட்டி ஊராட்சி தலைவர் மணிகண்டன் கூறுகையில், ''நுாலாத்துக்கோம்பையில் மொபைல் போன் கோபுரம் அமைத்தால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தகவல் தொடர்பு எளிதாக கிடைக்கும்,'' என்றார்.

