தி.மு.க., வரலாற்றில் கல்லக்குடி போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்கு, பெயர் பலகைகளில், 'கல்லக்குடி' என மாற்றி எழுதும் போராட்டத்தை, கருணாநிதியிடம், அண்ணாதுரை ஒப்படைத்தார்.
ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள பெயர் பலகைகளில், 'கல்லக்குடி' என மாற்றி எழுதியதோடு மட்டுமின்றி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அவரோடு சத்தி, கஸ்துாரி, குமாரவேல், குழந்தைவேல் ஆகியோரும், தண்டவாளத்தில் படுத்தனர். போலீசார், அதிகாரிகள் பேச்சு நடத்தியபோதும் போராட்டத்தை கைவிடவில்லை. ரயில் வந்தால் பயந்து எழுந்துவிடுவார்கள் என கருதி, ரயிலை இயக்கியபோதும் யாரும்
எழவில்லை.
வேறு வழியின்றி, போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி உள்பட அனைவரையும் கைது செய்தனர். பின் மக்கள் போராட்டமாக மாறியது. பல்வேறு அணிகளும் போராட்டத்தில் குதித்தன. கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர். ஆனால் கருணாநிதி புகழை, மக்கள் இடையே கொண்டு சென்ற முதன்மை போராட்டமாக, இப்போராட்டம்
அமைந்தது.

