/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உங்கள் ஒவ்வொருவரையும் என் கண்கள் தேடும்'
/
'உங்கள் ஒவ்வொருவரையும் என் கண்கள் தேடும்'
ADDED : ஜன 21, 2024 11:58 AM
சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்காக, அதன் செயலரும் அமைச்சருமான உதயநிதி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவராக திகழும் நம் கட்சி தலைவர் ஸ்டாலினின் தொண்டர்களில் ஒருவனான நான், இக்கட்சி மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில உரிமை மீட்பு முழக்கமாக, கட்சி இளைஞர் அணியின், 2வது மாநில மாநாடு, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடக்க உள்ள நிலையில், அனைவரும் மாநாட்டு பணிக்கு தீவிரமாக செயலாற்றியதை அறிவேன்.
'மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுக்கான அரசியலை செய்' என்றார் அண்ணாதுரை. அவரது சொற்களுக்கேற்ப, பேரிடர் நேரத்தில் மக்களுடன் மக்களாக களத்தில் நின்று மீட்பு, நிவாரண பணிகளை நம் கட்சியினர் மேற்கொண்டனர்.
இயற்கை பேரிடரில் இருந்து இயல்பு நிலையை மீட்டெடுத்து விட்டோம். ஆனால் ஒன்பதரை ஆண்டாக, பா.ஜ., ஏற்படுத்தியுள்ள பேரிடரில் இருந்து ஒட்டுமொத்த மத்திய அரசை மீட்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. அதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என, நம் தலைவர், நமக்கு அளித்த வாய்ப்பு, இளைஞர் அணி மாநாடு.
உங்கள் எல்லோரையும், இன்று பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்க உள்ள தி.மு.க., இளைஞரணி, 2வது மாநில மாநாட்டில் சந்திக்கப்போகிறேன். இதற்கு, 100 ஏக்கரில் லட்சக்கணக்கானோர் அமர்ந்து மாநாட்டை பார்க்க, பிரமாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு செய்துள்ளார்.
ஈ.வெ.ரா., நுழைவாயில், அண்ணாதுரை திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி அரங்கு, வீரபாண்டி செழியன், வீரபாண்டி ராஜா, 'நீட்' ஒழிப்பு போராளிகள் அனிதா, தனுஷ் என மாநாட்டு பந்தல் அமைந்துள்ளது.
மாநாட்டுக்கு முதல் நாளான நேற்று இளைஞர் அணி மாநில மாநாட்டை கொண்டு சேர்த்த, இருசக்கர வாகன பேரணி, முதல்வரின் முன் மாநாட்டு திடலில் அணிவகுப்பு நடத்தியது.
தொடர்ந்து இளைஞரணி வரலாற்றை எடுத்துச்சொல்லும்படி புகைப்பட கண்காட்சியை, நம் முதல்வர் திறந்து வைக்கிறார். இன்று காலை, கட்சி துணை பொதுச்செயலர் கனிமொழி, மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். அன்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். அதற்கு முன், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் பாலு உள்ளிட்ட தலைவர்கள், கட்சி சொற்பொழிவாளர்கள், மாநாட்டில் நாளெல்லாம் பேசுகின்றனர்.
திராவிட இயக்கத்தால் பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை காக்க, மத்திய அரசை மீட்க நாம் உறுதி எடுக்கப்போகும் இடம் தான் இந்த மாநாடு. ஏதோ சிலருக்கு ஆட்சி அதிகாரத்தில் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்கு உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல நமது இயக்கம். பதவி நிலையானதும் அல்ல. ஆனால் நம் கட்சி, கொள்கை நிலையானதாக இருக்க வேண்டும். இந்த உணர்வு நமக்கு வேண்டும்.
குறிப்பாக இந்தியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற மிக முக்கிய காலகட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் இருந்த எதிரிகளுக்கு கொஞ்சமேனும் நாணயம் இருந்தது. நம் கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திக்கும் எதிரிகளுக்கு நாணயம் என்பது கிடையாது. அதன் காரணமாகத்தான் இப்போதெல்லாம் ஜனநாயக களத்தில் நேரடி அரசியல் மோதல் என்பது குறைந்து சூழ்ச்சியாக விசாரணை அமைப்புகளை கொண்டு மோதுகின்றனர்.
சமூக ஊடக நிறுவனங்கள் மூலம், சாதகமான பொய் செய்திகளை பரப்பி மோதுகிறார்கள். மத, ஜாதி வெறியை துாண்டிவிட்டு மோதுகிறார்கள். சமூக நீதிக்கு ஆதரவானவர்களாக, தமிழை நேசிப்பவர்கள் போல நாடகமாடுகிறார்கள். இதன்மூலம் அவர்களின் கொள்கைகளை, கொள்ளைப்புற வாயிலாக நம் மக்கள் மீது திணிக்கிறார்கள். நேரடியாக எதையும் செய்யத்திராணியற்றவர்கள். இந்த சவால் யாவற்றையும் தகர்த்தெறிந்து தவிடுபொடியாக்கும் கடமை நம் முன் நிற்கிறது. அதை நாம் வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்ற உறுதியை நம் தலைவருக்கு கொடுக்கவே சேலத்தில் கூடுகிறோம். இளைஞரணி என்பது நம் தலைவர்கள் வகுக்கும் வியூகங்களை களத்தினில் செய்து முடிக்கும் படையாகும். நம் மீதான தாக்குதல்கள் பலமுனைகளில் இருந்து வரும். அவற்றையெல்லாம் முறியடித்து நாம் முன்னேறிச்செல்ல வேண்டும். அத்தகையப்
படையின் கட்டுப்பாட்டை நாம் சேலத்தில் காட்ட வேண்டும்.
மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தி கன்னியாகுமரியில் தொடங்கி, சட்டசபை தொகுதி வாரியாக, 234 தொகுதிகளிலும் கறுப்பு - சிவப்பு உடையணிந்த இளைஞரணியின் இருசக்கர வாகன அணிவகுப்பு நடந்தது. இதனிடையே, நம் கட்சி சார்பில், 'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, 50 லட்சம் கையெழுத்து பெற்று, அதை சேலம் மாநாட்டில் நம் தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால் நம் தோழர்களின் அயராத உழைப்பால், 80 லட்சம் கையெழுத்துகளை கடந்து, மேலும் கையெழுத்துகள் குவிந்தபடி உள்ளன. சேலம் இளைஞர் அணி மாநில மாநாடு, கட்சி கொள்கை திருவிழாவாக நடக்கிறது. தமிழக அரசியலில் மட்டுமின்றி, மத்திய அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகிறது. உங்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டு பந்தலில் என் கண்கள் தேடும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

