ADDED : ஜன 14, 2024 11:23 AM
பூக்கள் விலை 'கிடுகிடு'
சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகத்தில் உள்ள, வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு,
பனமரத்துப்பட்டி, வீராணம், அயோத்தியாப்பட்டணம், ஓமலுார் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. குறிப்பாக மல்லி, முல்லை கிலோ, தலா, 2,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஜாதிமல்லி, கலர் காக்கட்டான், மலை காக்கட்டான் தலா, 1,000, காக்கட்டான், 1,200, அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, 200, செவ்வரளி, 300, ஐ.செவ்வரளி, 220, நந்தியாவட்டம், 150, சி.நந்திவட்டம், 200, சம்பங்கி, 100, சாதா சம்பங்கி, 140 ரூபாய் என உயர்ந்தது.
பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாநகர், மாவட்டத்தில் பானை, பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. குமாரசாமிப்பட்டியில் மண் பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
அங்கு மக்கள், ஆர்வமாக வாங்கிச்சென்றனர். வண்ணம் பூசப்பட்ட பானை, 100 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. அரை கிலோ முதல் 6 கிலோ வரை பானைகள் உள்ளன. அடுப்பு, 150 முதல் விற்கப்படுகிறது. அதேபோல் மஞ்சள் கொத்து, 20 முதல், 40 ரூபாய்க்கு விற்பனையானது. போகி பண்டிகையான இன்று வீடுகளில் கட்டுவதற்கு, ஆவாரம் பூ, வேப்பிலை, மாவிலை, பண்ணைப்பூவால் தயாரான காப்பு கட்டி விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கரும்புகள், சிவதாபுரம், சின்னதிருப்பதி, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்தது. அதை வியாபாரிகள் வாங்கி, மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், கடைவீதி உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்களில் விற்பனைக்கு குவித்துள்ளனர். கரும்பு தரத்துக்கேற்ப, 20 முதல், 50 ரூபாய் வரை விற்கப் படுகிறது.
19ல் வேலைவாய்ப்பு
சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும், 19ல் நடக்க உள்ளது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ள முகாமில், 8, 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து வித கல்வித்தகுதி உடையோர் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 0427 - 2401750 என்ற எண்ணில் அழைக்கலாம்.
'டாஸ்மாக்' கடையில்
கொள்ளை முயற்சி
ஆத்துார் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி செக்காரமேட்டில், 'டாஸ்மாக்' கடை உள்ளது. அந்த கடையை நேற்று முன்தினம் இரவு, விற்பனையாளர் பெரியசாமி, 45, பூட்டிச்சென்றார். நள்ளிரவு, 1:00 மணிக்கு அங்கு வந்த மர்ம நபர்கள், கடையின் வெளிப்புற பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை உடைத்தனர்.
பின் கடை பூட்டை உடைத்து, 49 பீர் பாட்டில்களை சேதப்படுத்தி, ஒரு பெட்டி பிராந்தி பாட்டில்களை வெளியே எடுத்து வந்து வீசினர். 'கல்லா' பெட்டியின் பூட்டை உடைக்கும்போது அந்த வழியே போலீசார், 'ரோந்து' வர, மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது
குறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
நிலப்பிரச்னை விவகாரம்
சகோதரர்களுக்கு கத்திக்குத்து
மேச்சேரி, புக்கம்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் ராஜா, 29, முத்துக்குமார், 22. இவர்கள் நேற்று காலை மாரியம்மன் கோவில் அருகே பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது உறவினரான, அதே பகுதியை சேர்ந்த மனோகரன், 40, வந்தார். தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்கனவே ஏற்பட்ட நிலப்பிரச்னை தொடர்பாக, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனோகரன், கத்தியால் தாக்கியதில் சகோதரர்கள் காயம் அடைந்தனர்.
தகராறை தடுக்க முயன்ற மனோகரனின் மனைவி நந்தினி, 30, என்பவர் காயம் அடைந்தார். மனோகரன்,
நந்தினி சேலம் அரசு மருத்துவமனையிலும், சகோதரர்கள், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெலாப்பாடியில் கிளை அஞ்சலகம் திறப்பு
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம், வாழப்பாடி அடுத்த பேளூரில் துணை அஞ்சலகம் உள்ளது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள அருநுாற்றுமலை அடுத்த ஆலடிப்பட்டி கிளை அஞ்சலகம், 7 கி.மீ., தொலைவில் உள்ள பெலாப்பாடி, வாலுாத்து, தாளூர் மலை கிராமங்களுக்கு தபால் பட்டுவாடா உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை வழங்குவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டது. இதனால் பெலாப்பாடியில் கிளை அஞ்சலகம், கடந்த, 11ல் திறக்கப்பட்டது. கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் தலைமை வகித்து, கிளை அஞ்சலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, 'வாலுாத்து, தாளூர் உள்ளிட்ட மூன்று மலை கிராமங்கள் பயன்பெற, பெலாப்பாடியில் கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து அங்கு சேமிப்பு கணக்கு தொடங்கிய பெண்களுக்கு அதற்கான புத்தகம் வழங்கப்பட்டது. உதவி கண்காணிப்பாளர் மஞ்சு, ஆலடிப்பட்டி ஊராட்சி தலைவர் ஏழுமலை உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தால் கிடைத்தது சம்பளம்
ஒப்பந்த துாய்மை பணியாளர் ஆனந்தம்
நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அங்கு ஒப்பந்த துாய்மை பணியாளர்களாக, 71 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, 2 மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் நேற்று காலை, 6:30 மணிக்கு பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் முகமதுசம்சுதீன் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'சம்பளம் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார். இதனால், 11:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின் துாய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் நிலுவை சம்பளம் செலுத்தப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
குப்பையால் அவதி
இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதன் மைதான சுற்றுச்சுவர் அருகே, அப்பகுதியில் சேகரிக்கும் குப்பையை ஊராட்சி ஊழியர்கள் கொட்டுகின்றனர். அதில் இறைச்சி கழிவும் இருப்பதால், மாணவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பையை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்டை சேவல் விற்பனை அமோகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு நேற்று, 1,000க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை, அவற்றை வளர்ப்போர் கொண்டு வந்தனர். சேவல் வாங்க, கடப்பா, மைசூர், பெங்களூரு, தர்மபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். சேவல்கள், 1,500 முதல், 18,000 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையில் பலரும் அனுமதியின்றி பல இடங்களில் சேவல் சண்டை நடத்துவர். இதனால்தான் வழக்கத்தை விட சண்டை சேவல் விற்பனை அமோகமாக நடந்தது' என்றனர்.
வன விலங்கு வேட்டை
தடுக்க தனிப்படை
வனவிலங்கு வேட்டையை தடுக்க, வனச் சரக அலுவலர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கரிநாளில் சிலர் வன விலங்கு வேட்டைக்கு செல்வர். இதை தடுக்க, அந்தந்த வனச்சரகர் தலைமையில் தனிப்படை அமைத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பண்டிகையை முன்னிட்டு சிலர் அத்துமீறி வனத்தில் நுழைந்து மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட வருவர்.
சிலர் மது அருந்த வருவர். இதை தடுக்கவும், தீ விபத்து ஏற்படாமல் இருக்கவும், சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகம், வடக்கு, ஏற்காடு, மேட்டூர், டேனிஷ்பேட்டை, வாழப்பாடி வனச்சரகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தலைமையில் பண்டிகை விடுமுறை முடியும் வரை வனப்பகுதிகளில் ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபடுவர்.
இதனால் வனத்தில் அத்துமீறி நுழைவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

