sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 21, 2024 12:18 PM

Google News

ADDED : ஜன 21, 2024 12:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது வினியோக திட்ட

குறைதீர்க்கும் கூட்டம்

வேப்பனஹள்ளி ஒன்றியம் நேரலகிரி கிராமத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடந்தது. வட்ட வழங்கல் தனி தாசில்தார் ரமேஷ் தலைமை வகித்தார். பஞ்., தலைவர் வீணா நந்தீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ''நேரலகிரி கிராமத்தில் அதிகளவில் குடும்ப அட்டைகள் உள்ளன. இங்குள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகள் அடங்கிய மனுக்களை பெற்று இன்றைய தினமே குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக முதல்வர், உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். கூட்ட ஏற்பாடுகளை குடிமை பொருள் வழங்கல் தனி ஆர்.ஐ., சதீஷ் செய்திருந்தார்.

அனுமன் கோவிலில்

பா.ஜ.,வினர் உழவார பணி

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவையொட்டி, கிருஷ்ணகிரியில் அனுமன் கோவிலில் பா.ஜ.,வினர் நேற்று உழவார பணி மேற்கொண்டனர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி, அரசு அரசு போக்குவரத்துக் கழக புறநகர் பணிமனை அருகே உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் பா.ஜ.,வினர் உழவார பணியை மேற்கொண்டனர். பா.ஜ., செய்தி தொடர்பாளரும் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான நரசிம்மன் தலைமையில் நடந்த இப்பணியில் மாவட்ட பொதுச்செயலாளர் மீசை அர்சுணன், மாவட்ட இளைஞரணி தலைவர் விவேகானந்தன், ஆன்மிக பரிவு தலைவர் பாலா தேவராஜ் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஜிம் உரிமையாளர் கொலை வழக்கில்

குற்றவாளி கைது

தர்மபுரி அடுத்த எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாஷ், 29; தர்மபுரி நகர பகுதியில், ஜிம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் எட்டிமரத்துபட்டி பகுதியில் வெங்கடேஷ், 38 என்பவருக்கும் இடையே, வழித்தட பிரச்னை ஏற்பட்டது. இதில், வெங்கடேஷ் கத்தியால் குத்தியதில் பிரகாஷ் உயிரிழந்தார். சம்பவ இடம் சென்ற போலீசார், கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி., நாகலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரித்து வந்தனர். அதில், மதிகோன்பாளையம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., கோபி மற்றும் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர், பிரகாஷை கொலை செய்த வெங்கடேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மகாராஜகடை முனீஸ்வரர்

கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடையிலுள்ள முனீஸ்வரர் கோவிலில், ஜீர்னோதாரண மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா நேற்று முன்தினம் மதியம் கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு முனீஸ்வரர் சுவாமிக்கு பூ அலங்காரம் நடந்தது.நேற்று காலை, 5:00 மணிக்கு நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. காலை, 10:00 மணிக்கு கடம் புறப்பாடு, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இன்று (ஜன.21) மதியம், 1:00 மணிக்கு, ஊர் கூடைகள் எடுத்து பொங்கல் வைத்து பூஜை நடக்க உள்ளது. இரவு, 7:00 மணிக்கு உற்சவ மூர்த்தி உலாவும், வானவேடிக்கையும் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்துள்ளனர்.

கனரக வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளியில், தமிழ்நாடு டிப்பர் கனரக வாகன ஓட்டுனர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், வாகன ஓட்டுனர்கள் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் குமார் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹிட் அண்ட் ரன் சட்டத்தை திரும்பபெற வேண்டும். ஓட்டுனருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஓட்டுனர் விபத்தில் இறந்தால் அல்லது இயற்கை மரணம் அடைந்தால் ஓட்டுனர் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஓட்டுனர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என, வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு

பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக, ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.

தர்மபுரியில் பெரியார் பல்கலைக்கழக, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக, மின் ஆற்றல் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

முன்னதாக, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை தலைவர் செல்வபாண்டியன் வரவேற்றார். மேலாண்மை துறை கார்த்திகேயன் தலைமை வகித்து பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் மாணவர்களுக்கு விளக்க உரை வழங்கினார். உதவி பேராசிரியர் பிரசாத் நன்றி தெரிவித்தார். இந்த கருத்தரங்கை, செந்தில், கோபாலகிருஷ்ணன் மற்றும், 2 ம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தை கிருத்திகையையொட்டி

முருகன் கோவிலில் வழிபாடு

தை மாத கிருத்திகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.

தை மாத கிருத்திகையையொட்டி, தர்மபுரி அடுத்த சந்தனுாரிலுள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று காலை, பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு, இனிப்பு பொங்கல் பிரசாதமாக வழங்கப் பட்டது. இதேபோல், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், எஸ்.வி.,ரோடு முருகன் கோவில், அன்னசாகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், நெசவாளர் காலனி விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில் நேற்று, தை கிருத்திகையையொட்டி சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடந்தன.

ஒகேனக்கல்லில்

நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்துக்கு ஜன., பிப்., மாதத்திற்கு, 3.99 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், காவிரியில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 600 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் குட்டைப்போல் இருந்த ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால், மெயின்பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வாகன ஓட்டுனர்கள் முறையாக

வாகனத்தை இயக்க அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி, கலெக்டர் அலுவலகம் அருகில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள டோல்கேட்டில், வட்டார போக்குவரத்துத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு மாத விழா நடந்தது. இந்த விழாவை மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து, வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வாகனங்களில் ஒளிரும் வில்லைகளை ஒட்டினார்.

பின்னர் அவர் பேசுகையில், “சாலை விபத்தால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்பை தடுக்க, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது, முறையாக வாகனங்களை இயக்குவது நம் அனைவரின் கடமையாகும்,” என்றார்.

துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சியாயிணி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கிருஷ்ணகிரி காளியப்பன், ஓசூர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள், வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பொதுத்துறை ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

வேலுார் அருகே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், எல்.ஐ.சி., தற்காலிக ஊழியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

வேலுார் மாவட்டம், சதுப்பேரியை சேர்ந்தவர், எட்வின், 34; எல்.ஐ.சி., தற்காலிக ஊழியர். கடந்த, 2019 ல், வீட்டில் தனியாக இருந்த, 13 வயதுள்ள, 8ம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். வேலுார் அனைத்து மகளிர் போலீசார், எட்வினை போக்சோவில் கைது செய்தனர்.

இந்த வழக்கு, வேலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைப்பொன்னி, நேற்று முன்தினம் மாலை, எட்வினுக்கு, 20 ஆண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை: பொதுமக்கள் ஓட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே, கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனுடன் சேராத ஒற்றை ஆண் யானை, இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சினிகிரிப்பள்ளி அருகே முனிரத்னா, 35, என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, லக்கசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விவசாய நிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்தது. கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் விரட்டியதால், நுகனுார் காப்புக்காட்டிற்குள் சென்று மறைந்தது.

உயிர்பலியோடு, விவசாய பயிர்களும் நாசமாகி வருவதால், ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.15 லட்சத்தில் சமுதாய கூடம் கட்ட பூஜை

அஞ்செட்டி தாலுகா, உரிகம் பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, காங்., - எம்.பி., செல்லக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர், காங்., தலைவர் அப்துர் ரஹ்மான், பஞ்., தலைவர் மாதேவையா உட்பட பலர் பங்கேற்றனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 4 பேர் பயணம்

தேன்கனிக்கோட்டையில் கடந்த, 1990 அக்., 10ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடந்த, ராமஜோதி ரத யாத்திரை ஊர்வலத்தில், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்,தேன்கனிக்கோட்டை, திம்மசந்திரம், காமையூர் பகுதியை சேர்ந்த பாபு, சங்கர், ராஜா, நரசிம்மைய்யா ஆகிய, 4 பேர் பலியாகினர்.

இந்நிலையில், அயோத்தியில் நாளை (ஜன.22) நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, துப்பாக்கி சூட்டில் பலியான, 4 பேரின் குடும்பத்தை சேர்ந்த சாந்தம்மா, சிவம்மா, செல்வராஜ், சின்னபைய்யன் ஆகிய, 4 பேருக்கு, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இவர்கள், 4 பேரையும் வழியனுப்பும் நிகழ்ச்சி தேன்கனிக்கோட்டையில் நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், பலியானவர்களின் நினைவிடம் மற்றும் சமாதி, ஓசூர் பண்டாஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை முடிந்த பின், அயோத்திக்கு, 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உதவியாக, தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி பாபு உடன் சென்றார்.






      Dinamalar
      Follow us